ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 26 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் எந்த நேரமும் துப்பாக்கியும் கையுமாக அலைகிற தலீபான்கள் கடந்த ஆகஸ்டு 15-ந்தேதி, ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளனர். அதைத்தொடர்ந்து பல மேற்கத்திய நாடுகள் அந்த நாடுகளின் சொத்துகளை முடக்கி உள்ளனர். இதனால் அங்கு பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு போய் மக்கள் ஒருவேளை சாப்பாட்டுக்கே அல்லாடுகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அங்கு துர்க்மேனிஸ்தான் எல்லையில் உள்ள மேற்கு பட்கிஸ் மாகாணத்தில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் காதிஸ் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. இடிபாடுகளில் சிக்கி 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 5 பேர் பெண்கள், 4 பேர் குழந்தைகள் ஆவார்கள்.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 2 மணி நேரத்தில் அதே பகுதியில் மறுபடியும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.9 புள்ளிகளாக பதிவனாது.

ஆப்கானிஸ்தான் அவசர கால விவகாரங்கள் துறை அமைச்சகம் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில் “நிலநடுக்கத்தால் மொத்தம் 700-க்கும் மேற்பட்ட வீடுகள் பெருத்த சேதம் அடைந்துள்ளன. 26 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியாகி உள்ளனர்” என தெரிவித்தது.

முகிர் மாவட்டத்திலும் நிலநடுக்கத்தால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

Related Articles

Latest Articles