இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று நடைபெறவுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கிறது.
ஸ்டேடியத்தில் ரசிகர்களை அனுமதிக்காமல் கொரோனா தடுப்பு உயிர் மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ஒவ்வொரு போட்டிகளும் நடத்தப்படுகிறது. அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளைத் தொடர்ந்து இப்போது ஆஸ்திரேலிய அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக அங்கு பயணித்துள்ளது.
இதன்படி இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி சவுதம்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி ஒத்திவைக்கப்படாமல் இருந்திருந்தால், அதற்கு தயாராவதற்கு இந்த தொடர் உதவியிருக்கும். என்றாலும் இரு பலம் வாய்ந்த அணிகள் கோதாவில் குதிப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
இவ்விரு அணிகளும் இதுவரை 16 இருபது ஓவர் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 9 இல் ஆஸ்திரேலியாவும், 6இல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. இலங்கை நேரப்படி இரவு 10.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.