“ இது நாமல் ராஜபக்சவுக்கான நேரம் அல்ல, எனவே, ராஜபக்சக்கள் ஒரு அடி பின்வாங்கி, ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் முடிவையே எடுக்க வேண்டும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் முடிவையே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எடுக்கும் என நம்புகின்றேன். ஏனெனில் 2024 முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது பாரிய வெற்றியாகும்.
கடன்மறுசீரமைப்பு தொடர்பில் நாட்டுக்கு கிடைத்துள்ள செய்தி உண்மையாலுமே ஓர் நற்செய்திதான். இரு தரப்பு கடன் மறுசீரமைப்பால் நாட்டில் இடைநிறுத்தப்பட்டுள்ள சுமார் 200 அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிக்ககூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.” – என்றார்.