இருப்பவர்களிடமிருந்து பறித்து இல்லாதவர்களுக்கு வழங்கும் வகையில் ‘ ரொபின் ஹூட்’ பாணியிலான பட்ஜட்டையே நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச முன்வைத்துள்ளார் – என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தன் இரண்டாம்வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சுதந்திரக்கட்சி உறுப்பினரான சாந்த பண்டார, நிதி அமைச்சர் பஸிலின் பாதீட்டை இவ்வாறு பாராட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ இவ்வாறு சாதகமானதொரு வரவு- செலவுத் திட்டம் முன்வைக்கப்படும் என நாம் நம்பவில்லை. மக்கள்மீது சுமைகள் திணிக்கப்படும் என்றே எதிர்ப்பார்த்தோம். ஆனால் பஸில் ராஜபக்ச சிறப்பானதொரு வரவு- செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார். இலங்கை ரொபின் ஹூட் என்றழைக்கப்படும் மாவீரர் ‘சூர சரதியல்’ போன்றே பஸில் செயற்பட்டுள்ளார்.
சூர சரதியல் என்பவர் இருப்பவர்களிடம் பறிந்து, அவற்றை இல்லாதவர்களுக்கு வழங்கினார். அதேபோலவே பஸில் ராஜபக்சவும் மக்கள்மீது சுமைகளை திணிக்காது, அதிக இலாபம் உழைக்கும் நிறுவனங்களிடமிருந்து வரிகளை அறிவிட்டு, மக்களுக்கு வழங்கியுள்ளார். சூர சரதியில் பலவந்தமாக செய்தார். பஸில் ராஜபக்ச சட்டப்பூர்வமாக செய்கின்றார்.
இது நெருக்கடியான அதேபோல சவால்மிகுந்த காலப்பகுதியாகும். அப்படி இருந்தும் மக்களுக்கான பாதீடு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை எதிரணி எதிர்ப்பார்க்கவில்லை. அதனால்தான் போலியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தீர்த்து வைக்கப்பட்டதை விரும்பாதவர்களே இந்த பட்ஜட்டுக்கு எதிராக வாக்களிப்பார்கள்.”- என்றார்.