இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களின் நோக்கம் என்ன?

திறந்த பொருளாதார சந்தைக்கு மத்தியில் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், உலக நாடுகளுடன் நல்லுறவைப் பேண வேண்டும். அப்படி நல்லுறவு வலுக்கும் பட்சத்திலேயே வர்த்தகம் செழிக்கும். இதற்கு வெளிநாடுகளுடனான தொடர்புகளும், நட்புறவுகளும் மிக முக்கியமானவை. இவற்றை மையப்படுத்தியே அரச தலைவர்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கின்றனர்.

அளவுக்கு அதிகமான வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கிறார் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தார். வெளிப்படையாக வெளிநாட்டுப் பயணங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், இந்த விமர்சனம் சரியென எண்ணத் தோன்றும்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவுகளைச் சந்திக்க உலகத் தலைவர்களுடனான சந்திப்புக்கள், வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்கள், உறவுகள் முக்கியமானவை.

ரஷ்ய – உக்ரெய்ன் போரினால் ஏராளமான நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல நாடுகளில் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி மந்த கதியில் நகர்கிறது. இந்தியாவிலும் இந்தப் போரின் தாக்கங்கள் இருந்தன. ஆனால், இந்தியாவின் பொருளாதார மீட்பு நிலை வேகமாக இருந்தது. தெற்காசியாவில் இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை எடுத்துக் கொண்டால் மிக மோசமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியான நிலையில்கூட, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டுப் பயணங்கள் சிலவற்றை மேற்கொண்டிருந்தார். குறிப்பாக பிரித்தானிய மகாராணியின் இறுதி ஊர்வலம், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிக் கிரியைகள் ஆகியவற்றில் கலந்துகொண்டார். இந்தியப் பிரதமரும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார்.

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த அரச தலைவர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் விமர்சிக்கப்பட்டன. ஆனால், இந்தத் தலைவர்களின் இராஜதந்திர சந்திப்புக்கள், அதனால் ஏற்பட்ட, ஏற்படப் போகும் பிரதிபலன்கள் அதிகமாகும்.

இலங்கை ஜனாதிபதி ஜப்பான் சென்றிருந்தபோது, சிங்கப்பூர், ஜப்பான் தலைவர்களைச் சந்தித்து, இலங்கைக்கு சாதகமான பல செய்திகளை எடுத்துவந்திருந்தார். அதேபோல இந்தியப் பிரதமரும் பல இராஜதந்திர சந்திப்புக்களை நடத்தியிருந்தார்.

ரஷ்ய – உக்ரைன் போரினால் மேற்குலக நாடுகளின் ஆதிக்கம் குறையும் என்றும், இனி ஆசியா உலகில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொள்ளும் என்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிலிப்பைனஸில் தெரிவித்திருந்தார்.

இதனை நன்கு அறிந்துவைத்துள்ள இந்தியப் பிரதமர், தனது சர்வதேச ரீதியான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தி வருகிறார். இந்தியப் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் அதிகம் என்று விமர்ச்சிக்கப்பட்டாலும், இந்தியப் பிரதமரினால் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு வருமானம், பல மடங்கு அதிகம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டின் முதலாவது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை மே மாதம் தொடங்கியிருந்தார். மே 2ஆம் திகதி முதல் தனது சுற்றுப் பயணத்தைத் தொடங்கி, ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சென்றுவந்தார்.

அத்துடன், பிராந்தியம் பல சவால்களை எதிர்கொள்ளும் நேரத்தில் ஐரோப்பிய பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறினார். ஐரோப்பிய கூட்டாளிகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாக பிரதமர் மோடி மேலும் கூறினார்.

கடந்த ஜூன் 26 ஆம் திகதி ஜெர்மனி சென்ற பிரதமர் நரேந்திர மோடி ஸ்க்லோஸ் எல்மாவில் நடைபெற்ற ஜி7 நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்டார்.

இந்த வரிசையில்தான் இந்தியப் பிரதமர் இறுதியாக ஜப்பான் பயணத்தை மேற்கொண்டிருந்தார். ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ளச் சென்றாலும், அங்கு பல அரச தலைவர்களைச் சந்தித்து பிரதமர் மோடி பேசியிருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் பயணத்தின்போது தற்போதைய ஜப்பான் பிரதமர் Fumio Kishidaவைச் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் மறைவுக்கு பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலை மோடி தெரிவித்தார்.

இதன்பின்னர் இந்திய – ஜப்பான் இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் இதன்போது மோடி விவாதித்திருந்தார். இந்தியா-ஜப்பான் சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதிலும், பிராந்தியத்திலும் பல்வேறு சர்வதேச குழுக்கள் மற்றும் நிறுவனங்களிலும் இணைந்து பணியாற்றுவதிலும் தங்கள் உறுதிப்பாட்டை புதுப்பித்துக் கொள்வதற்கும் பிரதமர் மோடி இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின், ஏராளமான வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். அவற்றின் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு வலு சேர்த்ததுடன், திறந்த பொருளாதார வர்த்தகத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கும் இந்தப் பயணங்களை மோடி பயன்படுத்திக் கொண்டார். குறிப்பாக ரஷ்ய – உக்ரெய்ன் போரினால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக ஐரோப்பிய நாடுகள் தமது உலக வல்லரசு என்ற பலத்தை இழந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அப்படியிருக்கும் பட்சத்தில் ஆசிய நாடுகளின் கை ஓங்கும். இதில் ஜப்பான், இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால் சீனா தன்னாதிக்க போக்கில் செயற்படுவதால் கூட்டாக இணைந்து செயல்படும் நாடுகளினால் மட்டுமே தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்த வாய்ப்பு ஜப்பான், இந்திய நாடுகளுக்குக்கு சிறப்பாக இருக்கிறது. இதற்கு இராஜதந்திர உறவுகளே அடித்தளமாக அமையும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்த அத்திவாரத்தை இட்டுவருகிறார்.

Related Articles

Latest Articles