ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் இராஜதந்திர முன்னெடுப்புகள் பலவீனமானது, வெளிநாட்டு பயணங்களின்போது அரச பிரதிநிதிகள் வெவ்வேறான கருத்துகளை கூறிவருவதால் பல நாடுகள் இலங்கைமீது அதிருப்தியில் உள்ளன – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியை நிர்வகிப்பதுபோல நாட்டின் வெளியுறவுக் கொள்கையை நிர்வகிக்க முடியாது என்றும் சஜித் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு
” சீனக் கப்பல் தொடர்பில்கூட தற்போதைய அரசு பல்வேறு கதைகளைக் கூறிவந்தது. வரவிடமாட்டோம் என இந்தியாவிடம் கூறிவிட்டு , மறுபக்கம் சீனாவிடம் வாருங்கள் என கூறியுள்ளனர். இவ்வாறு நொடிக்கு நொடி மாறி மாறி கதைப்பதால் முக்கியமான பல சர்வதேச நாடுகள் இலங்கைமீது சீற்றத்தில் உள்ளன .
ஐக்கிய தேசியக் கட்சிக்கு பொய் சொல்வதுபோல் சர்வதேச சமூகத்திடம் பொய்யுரைக்க முடியாது. சீன கப்பல் விவகாரத்தை முழுவதுமாக குழப்பியதற்காக பல நாடுகள் நம் மீது கோபத்தில் உள்ளன. ஐக்கிய தேசிய கட்சியால் முடியாது போனாலும், ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிகரமான வெளிநாட்டுக் கொள்கையைக் கொண்டுள்ளது. எனவே, நாட்டில் தற்போது ஆட்சியிலுள்ள பலவீனமான அரசின் செயற்பாடுகள் காரணமாக இலங்கை மக்கள் மீதும், இலங்கைமீதும் கோபம் கொள்ள வேண்டாம் என சர்வதேசத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன்.” – என்றார்.










