இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் பிரதமர்

 

இந்தியா உடனான இருதரப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வைத்து இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“காஷ்மீர் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை என இந்தியா உடனான அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நாங்கள் விரும்புகிறோம். மேலும், வர்த்தகம் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு குறித்து எங்கள் அண்டை நாடுகளுடன் பேசவும் தயாராக இருக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7-ம் திகதி பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை அழித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 7-ம் திகதி முதல் 10-ம் திகதி வரை இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிதீவிர போர் நடைபெற்றது.

ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியாவின் முப்படைகளும் தாக்குதல் நடத்தின.
இந்நிலையில் பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று கடந்த 10-ம் திகதி இரு நாடுகளிடையே போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது.

இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். அதே நேரத்தில் இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் மூன்றாவது நபருக்கு இடமில்லை என இந்தியா ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles