இந்தியாவை ஒரு மூலோபாய எதிராளியாகவோ அல்லது மூலோபாய போட்டியாளராகவோ சீனா ஒருபோதும் கருதுவதில்லை என வங்கதேசத்துக்கான சீன தூதர் லி ஜிமிங் தெரிவித்துள்ளார்.
டாக்காவில் உள்ள ஒரு பத்திரிகையாளர் மன்றத்தில் பேசிய தூதர், பொருளாதார, புவிசார் அரசியல் மற்றும் பிற பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவும் சீனாவும் நெருக்கமாக இணைந்து செயல்பட முடியும் என்றார். “நாங்கள் இந்தியாவை சீனாவின் ஒரு மூலோபாய எதிராளியாகவோ அல்லது மூலோபாய போட்டியாளராகவோ ஒருபோதும் பார்க்க மாட்டோம்” என்று அவர் கூறியதாக தி டாக்கா ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா-சீனா இரண்டும் “புவிசார் அரசியல் பொறியிலிருந்து” வெளியேறி கடந்த காலத்திலிருந்து வேறுபட்ட புதிய பாதையைக் கண்டறிய வேண்டும் என்று இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வெய்டாங் கூறிய சில நாட்களுக்குப் பிறகு இந்தக் கருத்து வந்துள்ளது.
ஜூலை 2019 இல் பதவியேற்ற சன், செவ்வாயன்று தனது பிரியாவிடை உரையில், இரு தரப்பினருக்கும் இடையிலான வேறுபாடுகளைத் தீர்ப்பதன் அவசியத்தையும், மற்றவர்களின் உள் விவகாரங்களில் தலையிடாத கொள்கையை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
முக்கியமான அண்டை நாடுகளான சீனாவிற்கும் இந்தியாவிற்கும் சில வேறுபாடுகள் இருப்பது இயற்கையானதுதான், ஆனால் வேறுபாடுகளை எவ்வாறு கையாள்வது என்பது முக்கியமானது. “இரு நாடுகளின் பொதுவான நலன்கள் வேறுபாடுகளை விட பெரியவை என்பதை நாங்கள் அறிந்திருக்க வேண்டும்” என்று சீன தூதர் கூறினார்.
“…இரு தரப்பும் கருத்து வேறுபாடுகளை நிர்வகிக்கவும், தீர்க்கவும் முயற்சி செய்ய வேண்டும், மேலும் சீன-இந்திய உறவுகளை வேறுபாடுகளால் வரையறுக்காமல், பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலம் சரியான தீர்வு காண வேண்டும். இரு நாடுகளும் பரஸ்பர அரசியல் அமைப்புகளையும் வளர்ச்சிப் பாதைகளையும் மதிக்க வேண்டும். மேலும், ஒருவருக்கொருவர் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது என்ற கொள்கையை நிலைநாட்ட வேண்டும்,” என்றார்.
ஏப்ரல் 2020 முதல், இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் (LAC) நிலைமை குறித்து இந்தியாவும் சீனாவும் பல சுற்று இராஜதந்திர மற்றும் இராணுவ மட்ட சந்திப்புகளை நடத்தியுள்ளன.
எல்லையில் நிலையான சூழல் இல்லாமல் இருதரப்பு உறவுகள் சீராக இருக்க முடியாது என்று இந்தியா பல சந்தர்ப்பங்களில் சீனாவிடம் தெரிவித்தது.