பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புர் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் ஆடிய பங்காளதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ஓட்டங்களைப் பெற்றது. ஹசன் மிராஸ் சதம் அடித்து அசத்தினார். மஹ்முதுல்லா 77 ஓட்டங்கள் விளாசினார்.
272 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்ப வீரர்கள் விராட் கோஹ்லி (5 ரன்), ஷிகர் தவான் (8 ரன்) விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
மூன்றாவது வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக ஆடி 82 ரன்கள் விளாசினார். அக்சர் பட்டேல் 56 ரன்கள் சேர்த்தார். எனினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால் போதிய ரன்ரேட்டை எட்டவில்லை.
கடைசி நேரத்தில் போராடிய அணித் தலைவர் ரோகித் சர்மா, பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக விரட்டி வெற்றியை நெருங்கினார். கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் ரோகித் இலக்கை எட்டுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கடுமையாக போராடிய அவரால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அவர் 28 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 51 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார்.
50 ஓவர் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களே எடுத்தது. இதனால் பங்காளதேஷ் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.










