இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 110 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.
இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் 2 ஆட்டங்களின் முடிவில் 1-0 என்ற அடிப்படையில் இலங்கை முன்னிலை வகித்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.இந்த ஆட்டத்திற்கான நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடியது. 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 248 ஓட்டங்களை இலங்கை பெற்றது.
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக அவிஷ்க பெர்ணாண்டோ 96 ரன்னும், குசல் மெண்டிஸ் 59 ரன்னும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 249 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஆடியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினர். இதில் கில் 6 ரன்னிலும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் 35 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதையடுத்து களம் இறங்கிய இந்திய வீரர்கள் இலங்கையின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் கோஹ்லி 20 ரன், ரிஷப் பண்ட் 6 ரன், ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன், அக்சர் படேல் 2 ரன், ரியான் பராக் 15 ரன், ஷிவம் துபே 9 ரன், சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய வாஷிங்டன் சுந்தர் 30 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இறுதியில் இந்திய அணி 26.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இலங்கை அணி 110 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் வெல்லாலகே 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது. இதன் மூலம் இலங்கைக்கு எதிராக 27 வருடங்களுக்கு பின் ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக அர்ஜூன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி 1997 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொரை 3 – 0 என கைப்பற்றியுள்ளது.அப்போது சச்சின் டெண்டுல்கர் தலைமையில் இந்திய அணி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது.
அதன் பிறகு அர்ஜூன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி அடுத்த சில மாதங்களில் இந்தியாவுக்கு விஜயம் செய்து சர்வதேச ஒருநாள் தொடரில் விளையாடியதுடன் 3 போட்டிகள் கொண்ட அந்தத் தொடர் 1 – 1 எனும் ஆட்டக்கணக்கில் சமநிலையில் முடிந்தது.
அந்தத் தொடரிலும் இந்திய அணியின் தலைவராக சச்சின் டெண்டுல்கரே செயற்பட்டிருந்தார்.அதன் பிறகு இலங்கைக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடர்களில் இந்திய அணியே வெற்றிபெற்று வந்துள்ளது.
2006 ஆம் ஆண்டில் இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான சர்வதேச ஒருநாள் தொடரின் 3 போட்டிகளும் மழை காரணமாக கைவிடப்பட்டு தொடர் வெற்றி தோல்வியின்றி முடிந்தது.
இவ்வாறு தான் இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் வரலாறு அமைந்துள்ளது.அந்த வகையில் 27 ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு எதிராக சர்வதேச ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.