இந்திய பயணத்தின் பின்னராவது ஜே.வி.பிக்கு ஞானம் பிறக்கட்டும் – மொட்டு கட்சி எம்.பி.

“ இந்திய விஜயத்தின் பின்னராவது ஜே.வி.பியினருக்கு ஞானம் பிறக்க வேண்டும், இவ்வாறு ஓரிரு நாடுகளுக்கு சென்றாவது அவர்கள் புனர்வாழ்வடையட்டும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ இந்தியாதான் எமது பிரதான எதிரியென இந்திய எதிர்ப்பு கொள்கையை ஜே.வி.பி. கடைபிடித்து வந்தது. இலங்கை – இந்திய ஒப்பந்தத்துக்கு எதிராக இந்நாட்டில் பாரிய அழிவுகளை அக்கட்சி ஏற்படுத்தியது. இந்திய அமைதி படையை வானர படையென விமர்சித்தது. இந்திய முதலீடுகள்வரும்போது அதற்கும் போர்க்கொடி தூக்கியது.

இந்தியாவின் அமுல் நிறுவனம் இலங்கைக்கு வந்து, காணிகளை குறைந்த விலைக்கு வாங்கி பால் உற்பத்தி செய்யப்போகின்றது என ஜே.வி.பியின் விவசாய அமைப்பின் தலைவர் இங்கு குறிப்பிடுகின்றார். ஆனால் அக்கட்சியின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் இந்தியாவின் அமுல் நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களுக்கு செல்கின்றனர். இதன்மூலம் அக்கட்சியின் டபள்கேம் அம்பலமாகியுள்ளது. சீடர்கள் இங்கு கோஷம் எழும்புகின்றனர், குருநாதர் அங்கு விஜயம் செய்கின்றார்.

இந்திய விஜயத்தின் பின்னராவது அவர்கள் திருந்தட்டும், இப்படி வெளிநாடுகளுக்கு சென்றாவது புனர்வாழ்வு பெறட்டும். ஏனெனில் இங்கு அடிப்பதும், எரிப்பதும்தான் அவர்கள் இங்கு செய்துள்ளனர்…” – என்றார்.

Related Articles

Latest Articles