இந்திய மத்திய வங்கியிடமும் கடன் கேட்கிறது இலங்கை

இந்திய ரிசர்வ் வங்கியில் ஒரு பில்லியன் டொலரை பரிமாற்றம் செய்வதற்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை  நடத்திவருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு 500 மில்லியன் டொலரைகடனுதவியாக பெற்றுக்கொள்வதற்கும் இந்தியாவுடன் பேச்சு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் நீண்டகால அரசியல் நெருக்கடி நிலைமை சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெற்றுக்கொள்ளும் பேச்சு முன்னேற்றத்தை தாமதப்படுத்தலாமெனவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ரொய்ட்டர் செய்திச்சேவைக்கு அவர் வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்காக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்துள்ளதாகவும் அதேவேளை இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முடியாமல் போனால் தாம் பதவியிலிருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நாம் சர்வதேச நாணய நிதியத்திடம் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றமடைவதற்கு எரிபொருள் எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை நீக்குவது மிக முக்கியமாகும்.

அத்துடன் மிக விரைவாக இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதும் முக்கியமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தாம் பதவியேற்றுள்ள ஆறு வருட காலங்களையும் முழுமையாக நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles