இந்திய வீட்டுத் திட்ட வீடுகளை மக்களிடம் கையளிக்கிறார் ஜீவன்!

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இராகலை சூரியகாந்தி தோட்ட பிரிவான டியநிலை மேல் பிரிவு தோட்டத்தில் நல்லாட்சியின்போது நிர்மானிக்கப்பட்ட 166 வீடுகள் எதிர்வரும் ( 04 ) திங்கட்கிழமை  பயனாளிகளுக்கு கையளிக்கப்படவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள்  இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

கடந்த ஆட்சியின்போது டியநிலை தோட்டத்தில் இந்திய நிதியுதவியுடன் யூ.என்.எபிடாட் நிறுவனம் 166 வீடுகளுக்கான கட்டுமான பணிகளை முன்னெடுத்திருந்தது.

எனினும், 2019 இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தினால் இவ்வீடமைப்பு திட்டம் முழுமை பெறாது பயனாளிகளுக்கு கையளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

166 வீடுகளைக் கொண்ட இந்த தனிவீட்டு திட்டத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு குடிநீர், பிரதான வீதி மற்றும் உள்ளக வீதிகள்,மற்றும் மின்சாரம் என உட்கட்டமைப்பு வசதிகள் முன்னெடுக்கப்படாமல் காணப்பட்டது.

இதையடுத்து இத் தனி வீட்டு திட்டத்திற்குறிய வீடுகளின் குறைபாடாக காணப்பட்ட உட்கட்டமைப்பு பணிகள் தற்போதைய அரசாங்கத்தின் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு அமைச்சினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உட்கட்டமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இவ் உட்கட்டமைப்பு பணிகள் விரைவாக முன்னெடுக்க 26.6 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு இதில் பிரதான வீதிகள் செப்பனிட 5.1 மில்லியனும்,உள்ளக வீதிகள் செப்பனிட 4.3மில்லியனும் ஒதுக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.

மேலும் குடிநீருக்கென 10.2 மில்லியனும்,மின்சாரத்திற்கென 6.9 மில்லியனும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் பூர்த்தியாகியுள்ளன.

இவ்வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டு நீண்டகாலமாக பயனாளிகளுக்கு கையளிக்க முடியாத நிலையில் தெரிவின் அடிப்படையில் தமக்கென வழங்கப்பட்ட வீடுகளில் சிலர் வசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில் விரைவாக உட்கட்டமைப்பு பணிகள் பூர்த்திக்கப்பட்டு உத்தியோகப்பூர்வமாக வீடுகளை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே தற்போது நாடு ஓரலவு வழமைக்கு திரும்பும் நிலையில் இவ்வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்க தோட்ட வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நடவடிக்கைகளுக்கு அமைய இம்மாதம் (04.10.2021) அன்று பயனாளிகளுக்கு கையளிக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதமர் உள்ளிட்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அதிகரிகளுடன் முக்கியஸ்தர்களும் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வீடமைப்பு திட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகள் தொடர்பில் (01) மதியம் தோட்ட வீடமைப்பு சமூதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்,நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன், இ.தொ.கா தேசிய அமைப்பாளர் ரரஜதுரை,உபதலைவர் சக்திவேல் ,பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் ,இளைஞரனி பொதுச்செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் நேரடி விஜயத்தை மேற்கொண்டு பார்வையிட்டனர்.

இந்திய அரசாங்கத்தின் இந்த தனிவீட்டு திட்டமானது இராகலை டியநிலை கீழ்பிரிவு /மேல் பிரிவு,மல்லியப்பு,சூரியக்காந்தி தோட்டங்களில் கண்டறியப்பட்ட இயற்கை அனர்த்த அவதானிப்பு காரணமாக மக்களை பாதுகாப்பாக வாழவைக்கவும், வீடு வசதியற்றவர்களுக்கும் நிர்மானிக்கப்பட்ட வீடுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Latest Articles