இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்: ஜனாதிபதி உறுதி

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதுடன் இனப்பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்ததுடன், எதிர்வரும் 05 வருடங்களில் கிழக்கு மாகாணத்தை விரிவான அபிவிருத்திக்கு கொண்டு செல்லும் சவாலை தான் ஏற்றுக்கொள்வதாகவும் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் TMVP கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (22) மட்டக்களப்பில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

நாட்டில் வலுவான பொருளாதாரத்தை உருவாக்கும் அதேவேளையில், இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண நாம் பாடுபட வேண்டும். மேலும், இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்.

கிழக்கு மாகாணம் வளர்ச்சி குறைந்த மாகாணமாகும். அடுத்த 05 வருடங்களிலும் கூட இந்த மாகாணத்தை அபிவிருத்தி குறைந்த மாகாணமாக கைவிட்டுவிட முடியாது. எனவே கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான வேலைத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதன்போது மக்களின் வருமான நிலையை உயர்த்த வேண்டும்.

மேலும், நாட்டின் வளர்ச்சியடையாத ஏனைய மாகாணங்களை அபிவிருத்தி செய்யத் தேவையான வேலைத்திட்டத்தை நாங்கள் அமுல்படுத்தி வருகின்றோம்.

திருகோணமலை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்காக இந்தியா மற்றும் ஏனைய வெளிநாடுகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம். மேலும் இப்பகுதிகளுக்கு புதிய தொழில்களையும், முதலீடுகளையும் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தால், புதிய நிலம் விளைச்சளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மக்கள் பெருமளவு வருமானம் ஈட்ட முடியும். மேலும், இந்தப் பகுதியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும். ஹிகுரக்கொட விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படுவதன் மூலம் திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, தம்புள்ளை, அனுராதபுரம் ஆகிய பிரதேச மக்களும் நன்மையடைவார்கள். மட்டக்களப்பு விமான நிலையமும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

இந்த சவாலை நாம் ஏற்க வேண்டும். அந்த சவாலை வென்று கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றுவதற்கு நாம் செயற்பட்டு வருகின்றோம். மேலும், இனப்பிரச்சினையை இனியும் இழுத்தடிக்க வேண்டிய அவசியமில்லை, அதனை விரைவாக தீர்க்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.’’ என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

Related Articles

Latest Articles