இன்னும் நிரந்தர நியமனம் இல்லை – மலையக உதவி ஆசிரியர்கள் கவலை!

களுத்துறை மாவட்ட பெருந்தோட்ட உதவி ஆசிரியர்களாக 2015 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற 60 ஆசிரியர் உதவியாளர்களுக்கு இன்னும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் திகதி பயிற்சியை நிறைவு செய்து கொண்ட போதிலும் இன்னும் தாம் ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்படாமல் ஆசிரிய உதவியாளர்களாக பாடசாலைகளில் சேவையாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய மாவட்டங்களில் ஆசிரிய உதவியாளர்கள் சேவைக்கு உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான நிலுவை தொகையும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் 2015 ஆம் ஆண்டு நியமனம் பெற்று 2018 ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை நிறைவு செய்த தமக்கு இன்னும் நியமனங்கள் வழங்கப்படவில்லையென ஆசிரிய உதவியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி மாதாந்தம் வழங்கும் 10000 ரூபாய் கொடுப்பனவை கூட கல்வி வலயங்கள் முறையாக வழங்குவது இல்லையென ஆசிரியர் உதவியாளர்கள் குற்றம்சுமத்துகின்றனர். குறிப்பிட்ட மாத கொடுப்பனவை அடுத்த மாத கடைசியில் தான் வழங்குகின்றது.

ஏனைய ஆசிரியர்கள் 19 ஆம் 20 ஆம் திகதிகளில் தங்களது சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் நேரம் ஆசிரியர் உதவியாளர்கள் தங்களது தகமைகளை பூர்த்தி செய்தும் எந்தவித பயனும் இல்லாமல் இருக்கின்றார்கள்.

60 பேருக்கான நியமனங்களை பெற்றுத்தருவத்தில் ஏன் இந்த தாமதம் என அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இது தொடர்பாக மேல்மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகளிடம் கூறினால் தேர்தல் முடிந்ததும் உங்களுக்கான நியமனம் வழங்கப்படும் என அசட்டுத்தனமாக பதில் கூறி அனுப்பி வைக்கின்றனர்.

தேர்தல் முடிவடைந்து ஒரு மாத காலம் ஆக போகின்ற இந்த நிலையில் தங்களது நியமனம் தொடர்பாக எந்தவித ஏற்பாடுகளும் செய்வதாக தெரியவில்லை.

எனவே ஆசிரியர் நியமனத்தை பெற்றுத்தருமாறு உரிய அதிகாரிகளிடம் மேல்மாகாண களுத்துறை மாவட்ட ஆசிரிய உதவியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles