இன்றைய வானிலை எப்படி?

செயற்பாட்டு நிலையில் உள்ள தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலை காரணமாக, நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொணராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல், பலத்த காற்றினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கடல் பிரதேசங்கள் கொந்தளிப்பான நிலை; அவதானம்!
காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசுவதுடன் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு மற்றும் புத்தளம் ஊடாக காங்கேசந்துறை வரையும், கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசுவதுடன் அவ்வப்போது கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அலைகள் சுமார் 2.0-2.5 மீ. உயரத்திற்கு (இது கரைக்கு வரும் அலையின் உயரம் அல்ல) அதிகரிக்கலாம். இது தொடர்பில் கடற்றொழிலில் ஈடுபடுவோர், மீனவ சமூகங்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

செயற்பாட்டில் உள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக, அரபிக் கடல் பகுதியில் (10N – 20N), (55E – 75E) மற்றும் வங்காள விரிகுடா (12N – 17N), (83E – 93E) வரையிலான கடல் பகுதிகளில்) மிக பலமான காற்று (70-80 கி.மீ.) மற்றும் மிகவும் கொந்தளிப்பான கடல் நிலை காணப்படும்.

Related Articles

Latest Articles