” இரசாயன உரப் பாவனை கடந்த நான்கு வருடங்களில் நூற்றுக்கு 300 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இதனால் இரசாயன உரப் பாவனையால் ஆரோக்கியமற்ற சமூகமொன்று உருவாகி வருகிறது. இது மிகவும் ஆபத்தானதொரு நிலையாகும். இதனை தடுத்து நிறுத்தி,சேதனை பசளை முறைக்கு விவசாயத்தை நகர்த்தும் அரசின் தேசிய வேலைத்திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டுமென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விவசாய அமைச்சின் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
“உலகில் இரசாயன உரத்தை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட்டுவந்த பல நாடுகள் தற்போது சேதனை பசளை உரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்யும் நிலையை நோக்கி நகர்ந்து வருகின்றன.இரசாயன உர பாவனையால் சுற்றுச் சூழல் மற்றும் சுகாதாரத்துக்கு ஏற்படும் ஆபாத்தமான நிலையை ஆய்வுகள் மூலம் உணர்ந்து அந்தச் செயற்பாடு கைவிடப்பட்டு வருகிறது. உலகில் 187 நாடுகள் சேதனை பசளை முறையை நோக்கி நகர்ந்துள்ளன.
2017 ஆம் ஆண்டு நான்கு இலட்சம் மெற்றிக்தொன் இரசாயன உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இவ்வருடத்துக்கு மெட்றிக் தொன் 1.2 மில்லியன் இரசாயன உரம் அவசியமென கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது கடந்த நான்கு வருடத்தில் நூற்றுக்கு 300 சதவீதத்தால் இரசாயன உர பயன்பாடு நாட்டில் அதிகரித்துள்ளது.இது மிகவும் அவதானமிக்க நிலையாகும். இவ்வளவு இரசாயன பயன்பாடு அதிகரித்தும் உற்பத்திகள் அதிகரிக்கவில்லை. விவசாயம் செய்யும் நிலப்பரப்பும் அதிகரிக்கவில்லை. எமது நாட்டில் 15 லட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பில்தான் விவசாயம் செய்யப்படுகிறது. நெல், தேங்காய், இறப்பர், தேயிலை, மரக்கறி என அனைத்து தேவைகளுக்கு 15 லட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்புதான் பயன்படுத்தப்படுகிறது. என்றாலும் அதில் தற்போது உற்பத்தி செய்யப்படுவது 13 லட்சம் ஹெக்டேயர்தான்.
விவசாயத்துக்கு இரசாயன உரத்தைதான் பயன்படுத்த வேண்டுமென அனைவரும் நினைக்கின்றனர்.1965ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களிலும் இதனைதான் கற்றுக்கொடுத்து வருகின்றனர். சேதனை பசளை என்றால் கொம்போஸ் உரம் மாத்திரம்தான் என நினைக்கின்றனர். இன்று தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது. எமது நாட்டில் சேதனை பசளையை உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருட்கள் உள்ளன. இரசாயன உரம் பாவிக்காத ஒரு காலம் எமது நாட்டில் இருந்தது.
தற்போது அடுத்த போகத்துக்குத் தேவையான உரத்தை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. சேதனை பசளை உற்பத்தியாளர்கள் விவசாயிகளுடன் கலந்துரையாடல்கள் நடாத்தி வருகின்றனர். விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை உரிய நேரத்தில் பெற்றுக்கொடுப்போம். அதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
இரசாயன உரத்துக்கான தடையால் உணவு தட்டுப்பாடு ஏற்படவும் இடமளிக்கமாட்டோம். மக்களுக்கு நச்சுத்தன்மையற்ற உற்பத்தி பொருட்களை வழங்குவதே எமது நோக்கமாகும்.
1994 இல் முதல் சிறுநீரக நோயாளி கண்டறியப்பட்டார். இன்று 65ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளர்கள் உள்ளனர். சிறுநீரக நோய்க்கு இரசாயன உரம்தான் காரணம் என்பது ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் சிறுநீரகத்தை பாதுகாக்க வேண்டும். வடமேல் மாகாணத்தில் 25 சதவீதமானவர்களுக்கு நீரிழிவு நோய் உள்ளது. இதுபோன்று பல நோய்கள் இரசாயன உரம் பாவனையால் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, இதனை அரசியல்மயப்படுத்த வேண்டாமென எதிர்க்கட்சியினரிடம் கோரிக்கை விடுக்கின்றோம். எமது எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க வேண்டும். இந்த தேசிய வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு கோருகிறோம். 100 பில்லியன் வர்த்தகத்துடன்தான் நாம் போராடுகிறோம் .” – என்றார்.