தென்னிலங்கையை அதிர்ச்சியில் ஆழ்த்திய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சட்டத்தரணியும் அவரது மனைவியும் உயிரிழந்துள்ள நிலையில், விசாரணை வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அக்குரேகொட பகுதியில் நேற்று (13) மாலை சுமார் 5 மணியளவில் இந்த கொடூரச் சம்பவம் இடம்பெற்றது.
பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகன தரிப்பிடத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் வாகனத்தில் இருந்த சட்டத்தரணியையும் அவரது மனைவியையும் குறிவைத்து, காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிச்சென்றுள்ளனர்.
இந்த இரட்டைக் கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை விரைவாக கைது செய்யும் நோக்கில் 10 விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அதேவேளை, சிஐடியினரும் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இந்நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கொழும்பில் நாளை அவசர விசேட கூட்டமொன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
சட்டத்துறையினர் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு நிலைமை உள்ளிட்ட விடயங்கள் இதில் விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 14 வருடங்களுக்கு பிறகே சட்டத்தரணிகளால் அவசர கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
உயிரிழந்த சட்டத்தரணிக்கு 44 வயதெனவும், அவரது மனைவிக்கு 43 வயதெனவும் தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவத்தின் பின்னணியில் பாதாள குழு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.










