இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் சுமார் 1000 அடி உயரம் கொண்ட தர்பனா எல மலை அடிவார பகுதியில், உடற் பாகங்கள் சிதறி இருந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தை இராகலை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை மாலை மீட்டுள்ளனர்.
இராகலை ஹரஸ்பெத்த பகுதியை சேர்ந்த மலிந்த தில்ஷான் (வயது 24) என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சடலமாக மீட்கப்பட்ட மலிங்க தில்ஷான், தனது வீட்டில் தாய், தந்தையரை தாக்கி சண்டையிட்டு,
” நான் எங்காவது போய் எனது உயிரை மாய்த்துகொள்வேன், எனது உடல்கூட உங்களுக்கு கிடைக்காது.” எனக் கூறிவிட்டு முதலாம் திகதி மாலை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதையடுத்து பெற்றோர், இராகலை பொலிஸ் நிலையத்திற்கு விரைந்து தமது மகன் மது அருந்தி – தங்களை தாக்கிவிட்டு கோபத்தில் வீட்டைவிட்டு சென்றதாக முறைப்பாடு செய்துள்ளனர்.
அதேநேரத்தில் கோபத்தில் சென்ற மகன் வீட்டுக்கு வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளதாகவும் விசாரணையில் தெரிவித்தும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை இளைஞரின் வீட்டாருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பில் தன்னை அடையாளம் படுத்திகொள்ளாத நபர், தர்பனா எல மலை அடிவாரத்தில் சடலம் ஒன்று கிடப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இத்தகவலை பெற்றோர் இராகலை பொலிஸ் நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர். பின் தர்பனா எல மலை அடிவாரத்திற்கு விரைந்த இராகலை பொலிஸார், அங்கு உடல் பாகங்கள் உடைந்து உயிரிழந்த நிலையில் இளைஞரின் சடலத்தை மீட்டுள்ளனர்.
அவர் தமது மகன்தான் என்பதை பெற்றோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தற்கொலையா, கொலையா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
அத்துடன் தர்பனா எல மலை , சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்டுள்ளது என தெரிவித்த பொலிஸார் இம் மலை உச்சியிலிருந்து இவ் இளைஞன் வீழ்ந்துள்ளமையினால் உடல் பாகங்கள் உடைந்து மரணம் சம்பவித்திருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் மரண விசாரணையின் பின் பிரேத பரிசோதணைக்காக நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
செ.திவாகரன்










