ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு ஆதரவு வழங்கும் அதேவேளை கட்சியை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படும். இதற்கான பணியை மேற்கொள்வதற்காக நான் மாவட்டந்தோறும் பயணம் மேற்கொள்ளவுள்ளேன் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” 1951 இல் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து தலைமைப்பதவியை வகித்தவர்கள் கட்சியைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அமைச்சர்கள், கட்சி அதிகாரிகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
அந்தவகையில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை தேசிய மட்டத்தில் பலப்படுத்துவதற்கான புதிய வேலைத்திட்டம் அவசியம். அதனை நாம் செயற்படுத்தியுள்ளோம். இவ்வாரம் முதல் மாவட்டந்தோறும் பயணம் மேற்கொள்ளவுள்ளேன். எமது கட்சியின் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் செல்வார்கள். கட்சியை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை அவர்கள் முன்னெடுப்பார்கள்.
இன்னும் தேர்தலொன்று அறிவிக்கப்படவில்லை. எனவே, அது பற்றி குறிப்பிடமுடியாது. புதிய அரசு ஆட்சிக்குவந்து இரு ஆண்டுகள்கூட செல்லவில்லை. எனவே, அரசுக்கு ஆதரவு வழங்கும் அதேவேளை கட்சியை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கையும் இடம்பெறும்.
இந்நாட்டில் தேசிய ஒருமைப்பாடு அவசியம். அப்போதுதான் நாட்டை கட்டியெழுப்ப முடியும். ஏனெனில் ஒரு அரசு முன்னெடுத்த திட்டங்களை, ஆட்சிமாற்றத்தின் பின்னர் மற்றைய அரசு நிறுத்திவிடுகின்றது. அமைச்சர்களும் அவ்வாறுதான் செய்கின்றனர். எனவே, தேசிய விடயங்களின்போது ஐக்கியம் அவசியம். இல்லையேல் திட்டங்கள் வெற்றியளிக்காது.” – என்றார்.