ரி – 20 உலகக்கிண்ண தொடரில், அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறும் 2ஆவது அரையிறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான், நெதர்லாந்து, பங்காளதேஷ், சிம்பாப்வே அணிகளை பதம் பார்த்தது.
தென்ஆப்பிரிக்காவுடன் மட்டும் தோல்வியை தழுவிய இந்திய அணி.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சூப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகளை பந்தாடியது. அயர்லாந்துக்கு எதிராக 5 ஓட்டங்கள் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக விளங்குகிறது. ஆனால் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஜோஸ் பட்லர் (ஒரு அரைசதத்துடன் 125 ரன்), அலெக்ஸ் ஹாலெஸ் (ஒரு அரைசதத்துடன் 119 ரன்) தவிர்த்து வேறு யாரும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. என்றாலும் பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, லிவிங்ஸ்டன் ஆகிய அதிரடி வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகளும் கிட்டத்தட்ட சரிசம பலத்துடனே தென்படுகிறது. அதனால் நெருக்கடியை திறம்பட சமாளிக்கும் அணியின் கையே ஓங்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்விரு அணிகளும் இதுவரை 22 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 12-ல் இந்தியாவும், 10-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன.
பாகிஸ்தான் , நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது. இன்று வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டியில் பாக். அணியுடன் மோதும்.










