” தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், கச்சதீவை மீட்க இதுவே சிறந்த தருணம்.”
சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற அரச விழாவில், 31 ஆயிரத்து 500 கோடி இந்திய ரூபா மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்,
” தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை தொடங்கி வைக்க வந்துள்ள பிரதமருக்கு நன்றி. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் அரசு விழா இது.
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். கல்வி, பொருளாதாரம், மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு சிறப்பாக விளங்குகிறது. மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை விட தமிழகத்தின் வளர்ச்சி தனித்துவமானது.
இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. சமுக நீதி, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியது தமிழகத்தின் வளர்ச்சி.
அனைவரையும் உள்ளடக்கிய தமிழகத்தின் வளர்ச்சியை திராவிட மாடல் ஆட்சி என குறிப்பிடுகிறோம். ஒன்றின் அரசின் மொத்த வரி வருவாயில் தமிழகத்தின் பங்கு 6 சதவீதம் ஆகும்.
ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களில் தமிழகத்தின் முக்கிய பங்காற்றுகிறது.
தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், கச்சதீவை மீட்டு அவர்களின் உரிமையை நிலைநாட்ட இது தகுந்த தருணம் என்பதை நினைவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளேன் என்று குறிப்பிட்டார்.
எனினும், கச்சத்தீவு விவகாரம் பற்றி தமது உரையில் மோடி எதனையும் குறிப்பிடவில்லை.