இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்கவுள்ள 2024 – முதலில் எந்த தேர்தல்? மலையக கட்சிகளுக்கு வலை!

தென்னிலங்கையில் உள்ள மூன்று பிரதான கட்சிகள் இதுவரை தமது கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அத்துடன், சில சிறுகட்சிகளும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி வேட்பாளர் போட்டியிடவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி – கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறங்குவார், இதுவே கட்சியின் உறுதியான நிலைப்பாடு என்று நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்கவை களமிறக்குவதற்கு அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு முடிவெடுத்துள்ளது.

அத்துடன், தமது கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க எனவும், அவர் பொது வேட்பாளராக களமிறங்குவார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

பிரதான அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தல் குறித்து இறுதியான – உறுதியான முடிவை இன்னும் எடுக்கவில்லை. வடக்கு, கிழக்கில் செயற்படும் தமிழ்த் தேசியக் கட்கிகளும் தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கவில்லை.

அதேவேளை, நவநசமாஜக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி உட்பட சில சிறு கட்சிகளும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்திருந்தாலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இரு கட்சிகளுக்கிடையில் இன்னும் ஒருமித்த நிலைப்பாடு இல்லை.

மொட்டு கட்சியில் உள்ள சிலர், அடுத்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினாலும், மேலும் சிலர் தமது கட்சியின் சார்பில் வேட்பாளர் களமிறக்கப்பட வேண்டும் என குறிப்பிடுகின்றனர். இதனால் அக்கட்சி பிளவுபடும் அபாயத்தில் உள்ளன.

மொட்டு கட்சியின் சார்பில் நால்வரின் பெயர்கள் பரீசிலிக்கப்பட்டுவருகின்றது எனவும், அவர்களில் ஒருவர் தம்மிக்க பெரேரா எனவும் மொட்டு கட்சி செயலாளர் அறிவித்துள்ளார். ஏனைய மூவரில் ரணிலின் பெயர் உள்ளதா என்பது தெரியவரவில்லை.

இதற்கிடையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவு வழங்காவிட்டாலும் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் தேசிய தேர்தலொன்று நடைபெறுவது உறுதி. அது பொதுத்தேர்தலா அல்லது ஜனாதிபதி தேர்தலா என்ற கேள்வி எழுகின்றது.

அரசமைப்பின் பிரகாரம் 2024 நவம்பர் மாதத்துக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டு, அத்தேர்தலில் வெற்றிபெற்றிருப்பவர் பதவி ஏற்றிருக்க வேண்டும். அப்படியானால் ஜுலை மாதமளவில் தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதால் அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும், சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம். எனவே, இது ஒத்திவைப்பு என்பது சாத்தியமற்றது.

சிலவேளை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதானால் அதற்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும், சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் நாளில் நாடாளுமன்றமும் கலைக்கப்பட வேண்டும் என எதிரணிகள் வலியுறுத்தியுள்ளதால் இந்த தேர்விலும் ஜனாதிபதி இறங்கமாட்டார். ஆக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதேவேளை, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் தற்போது ஜனாதிபதியின் கைகளுக்குள் வந்துள்ளது. நாளை வேண்டுமானாலும் அவர் அதனை கலைக்கலாம். நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் 2025 வரை இருந்தாலும் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் எனக் கூறப்படுகின்றது. எது எப்படி இருந்தாலும் 2024 இல் தேசிய தேர்தல் ஒன்று வருவது உறுதி.

இதற்கிடையில் மலையக கட்சிகளின் ஆதரவை பெறுவதற்குரிய முயற்சிகளிலும் பிரதான கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

ஆர்.சனத்

Related Articles

Latest Articles