இலங்கையின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலுக்கு ஐக்கிய அமெரிக்காவின் ஒத்துழைப்பு

இலங்கையின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஐக்கிய அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜெனட் யெலன் உறுதியளித்துள்ளார்.

புதிய நிதி ஒப்பந்தத்திற்கான தலைவர்களுக்கான மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்சிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜெனட் யெலன் ஆகியோருக்கிடையில் நேற்று (22) இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் இலங்கையில் நடைமுறையிலிருக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

நிதி மற்றும் கடன் வழங்கல் மூலம் இலங்கையின் நிலையான அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஐக்கிய அமெரிக்கா வழங்கி வருகின்ற ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, திறைசேரியின் செயலாளர் என்ற வகையில் யெலன் வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கும் நன்றி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய அமெரிக்க திறைசேரியின் செயலாளருக்கு விளக்கமளித்தார்.

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் சவாலானதாக அமைந்திருந்தாலும் புரிந்துணர்வுடன் முன்னோக்கிச் செல்வதற்கு முயற்சிப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இருதரப்பு கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பிலும் ஜெனட் யெலன் அவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

இலங்கையின் அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் “காலநிலை சுபீட்சத்திற்கான திட்டமிடல்” என்பன தொடர்பிலும் இத்திட்டங்களுக்கு தனியார் துறையின் உதவியைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இலங்கை மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பிலும் இங்கு ஆராயபட்டதோடு, எதிர்வரும் தினமொன்றில் இலங்கைக்கான விஜயமொன்றினை மேற்கொள்ளுமாறும் செயலாளருக்கு அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
23-06-2023

Related Articles

Latest Articles