இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட 10 கிலோ தங்கத்துடன் ஐவர் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை மற்றும் கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வருவதாக தமிழகம், திருச்சியில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து இரவோடிரவாக மண்டபம் வந்த வருவாய் புலனாய்வுத் துறையினர் , மண்டபம் கடலோர காவல் படையினருடன் இணைந்து கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பலில் மன்னார் வளைகுடா தீவுப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் அந்தப் படகை வழிமறித்து சோதனை செய்ததில் படகில் தங்கம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து படகை மண்டபம் சுங்கத்துறை அலுவலதிற்கு கொண்டு வந்து நிறுத்தியதுடன் தங்கத்தை கடத்தி வந்த ஐந்து நபர்களையும் தங்கத்தையும் கடலோர காவல் படை முகாமிற்கு கொண்டுசென்று கடத்தல்காரர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் கடத்தி வரப்பட்டது 10 கிலோ தங்கம் என்றும் படகில் வந்தவர்கள் மண்டபம் மரைக்காயர் பட்டிணத்தில் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வருகிறது. கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 5 கோடி இருக்கும் என தெரியவருகிறது.










