” இஸ்ரேலியர்களுக்கு இலங்கையில் ஆன்மீக மத்திய நிலையங்களை (யூத வழிபாட்டு தலம்)அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனினும், அவ்வாறான நிலையங்கள் செயற்பட்டுவருகின்றன. இவற்றை நிறுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.” என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பிரதம அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இஸ்ரேலில் இருந்து கடந்த வருடம் 25 ஆயிரத்து 541 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். சுற்றுலா விசாவில் நாட்டுக்கு வருகைதந்து, வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எவ்வித அனுமதியும் இல்லை.
எனினும், இஸ்ரேலியர்கள் மட்டுமல்ல ஏனைய சில நாடுகளில் இருந்து சுற்றுலா விசாவில் வருபவர்கள், வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இதற்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றை தடுத்து நிறுத்துவது பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலியர்கள் ஆன்மீக மத்திய நிலையங்களை அமைப்பதற்கோ அல்லது அதற்கு சமாந்தரமான கட்டங்களை அமைப்பதற்கோ புத்தசாசன, மதவிவகாரம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சோ, அதன்கீழ் இயங்கும் திணைக்களங்கள் ஊடாக அனுமதி வழங்கப்படவில்லை.
எனினும், இவ்வாறான மத்திய நிலையங்கள் இயக்கப்பட்டுவருகின்றன என்பது தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இது தொடர்பில் கண்காணிக்கப்படுகின்றது. அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, இது தொடர்பில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி கலந்துரையாடிவருகின்றோம். நிறுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி வெளிவிவகார அமைச்சு ஊடாகவும் தலையீடுகள் செய்யப்படும்.” – என்றார் பிரதமர்.