” போர் காலத்தில் வடக்கு மக்களுக்காக இலங்கை இராணுவமும், அரசும் செய்ததை முன்னுதாரணமாகக்கொண்டு காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும். போர் காலத்தில் வடக்கு மக்களுக்கு உணவு கிடைப்பதற்கு இராணுவம் தடையாக இருக்கவில்லை. மக்களுக்கு உணவு விநியோகித்துகொண்டுதான் யுத்தமும் செய்யப்பட்டது. இவ்வாறு மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்துக்கு எதிராக ஜெனிவாவில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது கவலையளிக்கின்றது.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இஸ்ரேல் – பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஐக்கிய நாடுகள் சபை முன்வர வேண்டும். காசா பகுதியில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைய வேண்டும். அதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் ஐ.நா. தவறியுள்ளது.
போர்காலத்தில் எப்படி செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் சிறந்த முன்னுதாரணத்தை வழங்கிய நாடுதான் இலங்கை. வடக்கில் 4 லட்சம் மக்களுக்கு மாதாந்தம் உணவு அனுப்புவோம். மக்களுக்கு உணவு வழங்கிகொண்டுதான் போர் செய்தோம். மனிதாபிமான உதவிகளும் வழங்கப்பட்டன. பயங்கரவாதிகளால் பணயக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டிருந்த மக்களையும் மீட்டோம். அதற்காக இராணுவத்துக்கு நன்றிகூற வேண்டும்.
இப்படியான இராணுவத்துக்கு எதிராக ஜெனிவாவில் பிரேரணைகள் கொண்டுவரப்படுவது கவலையளிக்கின்றது. இலங்கை செயற்பட்டதுபோல காசா பகுதியில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கு ஐநா நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றார்.
