2020 ஆம் ஆண்டானது எல்லோர் மனங்களிலும் ஏதோ ஒரு விதத்தில் துன்ப அலைகளை முட்டிமோதவைத்த வருடமாகவே பார்க்கப்படுகின்றது. கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தால் 18லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இரண்டாம் உலக போருக்கு பின்னர் உலகளவில் அதிகளவானவர்கள் உயிரிழந்த காலப்பகுதியாகவும் 2020 மாறியது. உலக நாடுகளின் பொருளாதாரம் மட்டுமல்ல அனைத்து துறைகளும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. இவ்வாறு கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பட்டியலிட்டுக்கொண்டே செல்லாம்.
எனினும், கொரோனாவுக்கு மத்தியிலும் இலங்கையில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் பல சம்பவங்கள் அரங்கேறின. அதேபோல் 2020 ஆண்டானது இலங்கை அரசியல் வரலாற்றில் பல மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பில் பார்வையை செலுத்துவோம்.
1951 ஆம் ஆண்டு உதயமான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, அதன்பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் தனித்தும், கூட்டணியாகவும் போட்டியிட்டது. கூட்டணி அமையும் பட்சத்தில் அதற்கு சுதந்திரக்கட்சியே தலைமை வகித்தது. ஆனால் 6 தசாப்தங்களுக்கு பின்னர் மற்றுமொரு கட்சியுடன் இணைந்து போட்டியிடவேண்டிய நிலைமை அக்கட்சிக்கு ஏற்பட்டது. (யாழ். மாவட்டத்தில் மட்டுமே தனிவழி) கூட்டணி என்ற போர்வையில் அக்கட்சிக்கு தற்போது சரணாகதி அரசியலை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் மற்றுமொரு பழமையான கட்சியான ஐக்கிய தேசியக்கட்சிக்கும் 2020 அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது என்றே கூறவேண்டும். 73 ஆண்டுகளுக்கு பிறகு ஐக்கிய தேசியக்கட்சி இல்லாமல் நாடாளுமன்றம்கூடிய சம்பவமும் பதிவானது. தேசியப்பட்டியல் ஊடாக கிடைக்கப்பெற்ற ஓர் ஆசனத்துக்குகூட உறுப்பினர் ஒருவரை நியமித்துக்கொள்ளமுடியாமல் அக்கட்சி திண்டாடுகின்றது.
புதிதாக உருவான இரு கட்சிகளில் ஒன்று ஆளுங்கட்சியாகவும், மற்றுமொரு கட்சி பிரதான எதிர்க்கட்சியாகவும் வளர்ச்சி பெற்றுள்ளன.
இலங்கையில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், கொரானா வைரஸ் தாக்கத்தால் தேர்தலானது மூன்று தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட சம்பவமும் இவ்வாண்டு பதிவானது. வாக்களிப்பு நேரமும் அதிகரிக்கப்பட்டிருந்தது. வழமையாக தேர்தல் தினத்தன்று நள்ளிரவில் வாக்கெண்ணும் பணி ஆரம்பமாகும். ஆனால் இம்முறை வாக்களிப்பு தினத்துக்கு அடுத்த நாள் காலையில் இருந்தே வாக்கெண்ணும் பணியும் ஆரம்பமானது.
வழமையாக மே தினம் மற்றும் கட்சி மாநாடுகளின்போது ஆளனி பலத்தை காட்டுவதற்காக அரசியல் கட்சிகள் பெருமளவில் ஆதரவாளர்களை திரட்டிவந்து கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்துவது அரசியல் கலாச்சாரமாக பின்பற்றப்பட்டுவந்த நிலையில், இம்முறை மே தினக் கூட்டங்கள், பேரணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தன. கட்சி மாநாடுகள்கூட கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலேயே நடத்தப்பட்டன.
1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையை பெற்றது. தொகுதிவாரியாக நடைபெற்ற தேர்தலில் இதுவே பெரு வெற்றியாக அமைந்தது. 2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன 145 ஆசனங்களை வென்றது. விகிதாசார முறைப்படி நடைபெற்ற தேர்தலில் கட்சியொன்று பெற்ற கூடுதல் ஆசனங்களின் எண்ணிக்கை இதுவாகும்.
இப்படி பல மாற்றங்களை இலங்கை அரசியலில் 2020 ஏற்படுத்தியுள்ளன.
ஆர்.சனத்










