இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் தரைவழி தொடர்பை ஏற்படுத்தும் விதத்தில் பாலம் அமைக்கப்பட வேண்டுமெனில் அது தொடர்பில் இலங்கை மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது இந்திய பிரதமருடனான சந்திப்பின்போது தரைவழித் தொடர்பு தொடர்பான சாத்தியப்பாட்டை ஆராய்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே பேராயர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” எமது நாட்டுக்குரிய இங்கள், ஒவ்வொரு நாட்டுக்கும் துண்டு துண்டாக விற்பனை செய்யப்பட்டுவருகின்றது. சில சக்திகளுக்கு அடிபணிந்து தவறான முடிவுகளை எடுத்து, நாட்டை சீரழிவு திசையை நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கின்றனர்.
தற்போது இந்தியாவுக்கு பாலம் அமைக்கப்போவதாக கூறுகின்றனர், ஒரு காலத்தில் இந்தியா பருப்பு போட்டது, அதன்பின்னர் இராணுவத்தை அனுப்பியது, இவை நினைவில் இருக்கின்றதா? பாலமும் அமைந்தால் சிறப்பாகத்தான் இருக்கும்……..
எமது நாடு சுதந்திர நாடாகும். எந்தகாலகட்டத்திலும் எவருக்கும் அடிமையாக இருந்தது கிடையாது. எமது தலைவர்களின் காட்டிக்கொடுப்பால்தான் அந்நியர்களுக்கு அடிபணிய வேண்டிய நிலை ஏற்பட்டது. நாளையும் அது நடக்கலாம். எனவே, பாலம் அமைக்கும் திட்டம் தொடர்பில் மக்களிடம் கருத்து கணிப்பை நடத்துங்கள். அவ்வாறு மக்கள் அனுமதி இல்லாமல் செய்வது தவறு.” – என்றார்.
ராகமை பகுதியில் கடந்த 27 ஆம் திகதி நடைபெற்ற ஆன்மீக நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
