இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிலையானதொரு தீர்வைக் காண்பதற்கு உரிய தலையீடுகளை மேற்கொள்வதற்கு இரு நாடுகளின் தலைவர்களும் இணங்கியுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பினபோதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ இலங்கை, இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும், அப்பிரச்சினை இன்னும் தீரவில்லை. தென்னிந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் டோலர் படகுமூலம் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். அதேபோல இந்திய தரப்பில் இருந்தும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
மீனவர் பிரச்சினை சம்பந்தமாக இரு நாடுகளினதும் கடற்றொழில் அமைச்சுகள், 6 தடவைகள் வட்டமேசை மாநாட்டை நடத்தியுள்ளன. கடந்த ஒக்டோபர் 29 ஆம் திகதிகூட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்நிலையில் மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிலையானதொரு தீர்வை காண்பதற்கு உரிய தலையீடுகளை மேற்கொள்வதற்கு இரு நாட்டு தலைவர்களும் இணக்கத்துக்கு வந்தனர்.
இந்திய வீட்டுத் திட்டத்தின் 4 ஆம் மற்றும் 4 ஆம் திட்டங்களை தொடர்வதற்கு இந்தியாவின் உதவி தொடரும் எனவும் தெரியப்படுத்தப்பட்டது.” – என்றார்.