இலங்கை ‘சுப்பர் லீக்’ உதைபந்தாட்ட தொடர் பெப்ரவரி 10 ஆம் திகதி ஆரம்பம்!

சர்வதேச நாடுகளில் இடம்பெற்றுவரும் தொழில் ரீதியிலான உதைபந்து லீக் தொடர்களைப் போன்று இலங்கையிலும் இவ்வருடம் நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது.

“ ஸ்ரீலங்கா சுப்பர் லீக் உதைபந்தாட்டத் தொடர்” என்ற பெயரில் இம்மாதம் 29ஆம் திகதி கொழும்பில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை உதைபந்தாட்ட சம்மேளனம் செய்து வருகிறது.

இம்மாதம் 29ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டாலும் இதன் போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி 10ம் திகதி முதல் ஆரம்பித்து ஜுலை இறுதி வரை நடக்கவுள்ளது.

இத்தொடரில் வெள்ளிக்கிழமைகளில் ஒரு போட்டியும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரு போட்டிகளுமாக நடாத்துவதற்கு இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் திட்டமிட்டுள்ளது.

இதில் பங்குகொள்ளவிருக்கும் வெளியிடங்களிலிருந்து கொழும்புக்கு வரும் உதைபந்தாட்டக் கழகங்களுக்கான தங்குமிட வசதிகளையும், போக்குவரத்து செலவுகள், போட்டிகள் நடைபெறும் மைதானத்துக்கான செலவு மற்றும் நடுவர்களுக்கான செலவுகளையும் பெற்றுக்கொடுப்பதற்கும் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையில் முதல் முதலாக நடைபெறவிருக்கும் மேற்படி தொடரில் 10 அணிகள் பங்குகொள்ளவுள்ளன.

ப்ளூ ஈகல் உதைபந்தாட்ட கழகம், களுத்துறை ப்ளூ ஸ்டார், கெழும்பு உதைபந்தாட்ட கழகம், டிபெண்டர் உதைபந்தாட்டக்கழகம், வென்னப்புவை நியூ யங்ஸ் உதைபந்தாட்ட கழகம், கொழும்பு ரத்தினம் விளையாட்டு கழகம், பாணந்துறை ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகம், கொழும்பு ரினவுன் விளையாட்டுக் கழகம், கொழும்பு ஸீ ஹோர்க்ஸ் விளையாட்டுக்கழகம் மற்றும் நாவலப்பிட்டி அப்கன்ரீஸ் லயன்ஸ் விளையாட்டுக்கழகங்கள் இத்தொடரில் பங்குகொள்ளவுள்ளன.

இத் தொடரில் இலங்கை தேசிய அணி வீரர்களும், இலங்கை இரண்டாம் தர அணி வீரர்களும், எமது நாட்டிலுள்ள சகல உதைபந்தாட்ட கழகங்களிலுமுள்ள சிறந்த, அனுபவ வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளதால் இப்போட்டித் தொடர் விறுவிறுப்பாக நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தொடரில் நடைபெறவுள்ள அனைத்துப் போட்டிகளும் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா தாக்கத்தின் காரணமாக சுகாதார அமைச்சினதும், விளையாட்டுத்துறை அமைச்சினதும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி இத்தொடர் நடைபெறவுள்ளதால் ஒரே மைதானத்தில் இத்தொடர் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இத்தொடரில் ஒவ்வொரு அணியும் அடுத்த அணியுடன் இரு போட்டிகளில் விளையாட வேண்டும். அவ்வடிப்படையில் ஒரு அணி 18 போட்டிகளில் விளையாடவுள்ளது. இறுதியில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி இலங்கை சுப்பர் லீக் உதைபந்தாட்ட சம்பியன்களாகத் தேர்ந்தெடுப்பதற்கு இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இந்த அங்குரார்ப்பண தொடரில் சம்பியனாகும் அணிக்கு சம்பியன் கிண்ணத்துடன் 5 மில்லியன் ரூபா பணப்பரிசும் வழங்கப்படவுள்ளளது.

அத்தோடு இம்முறை தொடரில் கலந்துகொள்ளும் அனைத்து அணிகளுக்கும் பணப் பரிசு வழங்குவதற்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார். இத்தொடரில் கடைசியாக இடம்பெறும் அணிக்கும் ஒரு மில்லியன் பணப்பரிசு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நாட்டில் தொழில் ரீதியான விளையாட்டாக உதைபந்தாட்டத்தை உயர்த்துவதற்கு முதல் அடித்தளமாக இத்தொடரை அறிமுகப்படுத்தியுள்ளோம். இத்தொடரை எதிர்வரும் ஆண்டுகளிலும் சிறப்பாகச் செய்வதற்கான ஏற்பாடுகளை நாம் செய்து வருகிறோம்.

இவ்வருடம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இத்தொடரை வெற்றிபெறச் செய்வதற்கு சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் (பீபா) மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவின் வழிகாட்டலும் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளதாக இலங்கை உதைபந்தாட்ட சம்மேனத்தின் செயலாளர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles