இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் தொழிற்சங்க ஊழியர்களாகப் பணியாற்றும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு, அடிப்படைச் சம்பளமாக 11,800 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும் சம்பளமும் உரிய தினத்தில் வழங்கப்படுவதில்லை என்றும் தொழிற்சங்கப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர் என்று தமிழ்ழிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்படித் தொழிற்சங்கத்துக்கு 40இற்கும் மேற்பட்ட அலுவலகங்கள் காணப்படுகின்றன என்றும் இந்த அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கே போதிய சம்பளம் உரிய தினத்தில் வழங்கப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படித் தொழிற்சங்கத்தில் சுமார் 20,000 தொடக்கம் 30,000 சந்தாதாரிகள் அங்கம் வகிக்கின்றனர் என்றும் இவர்கள் தலா 150 ரூபாயை மாதச் சந்தாவாக
செலுத்துகின்றனர் என்றும் எனவே இந்தத் தொழிற்சங்கத்துக்கு மாதமொன்றுக்கு, 4,500,000ரூபாய் வருமானம் கிடைக்கின்றப் போதிலும் தொழிற்சங்க ஊழியர்களுக்கு எவ்விதச் சலுகைகளும் வழங்கப்படவில்லை என்றும் மேற்படி ஊழியர்கள் தெரிவித்தனர்.
கொரோனா தொற்று காரணமாக, மார்ச் முதல் மூன்று மாதங்களாக நீடிக்கப்பட்ட ஊரடங்குச்சட்டம் காரணமாகதொழிலாளர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தலா ஒரு குடும்பத்துக்கு 500 ரூபாய்க்கான நிவாரணங்களை வழங்குமாறு, தொழிற்சங்க ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகத்தைக் கோரியிருந்த போதிலும் நிவாரணம் வழங்குவதற்கு நிர்வாகம் மறுத்துவிட்டதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்படித் தொழிற்சங்கத்தின்அலுவலகங்கள்கூட எவ்விதஅபிவிருத்தியுமின்றிக் காணப்படுகின்றன என்றும் இந்தத் தொழிற்சங்கத்தை நிர்வகித்துவருபவர்களுக்கு, சந்தா செலுத்தும் தொழிலாளர்கள்மீதும் தொழிற்சங்க ஊழியர்கள்மீதும் எவ்வித அக்கறையும்இல்லை என்றும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில்,தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளரை தொடர்புகொண்டு கேட்க
முயற்சித்த போதிலும் முயற்சி பலனளிக்கவில்லை என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.