இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணி வீராங்கனைகளின் போட்டிக் கட்டணத்தை அதிகரிக்க இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது.
கடந்த ஜனவரி 31 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்காகவே இந்த ஊதிய அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்படி ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்காக ஒரு போட்டிக்கு வீராங்கனை ஒருவருக்கான போட்டிக் கட்டணம் 250 அமெரிக்க டொலரில் இருந்து 750 டொலர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அணியில் உள்ள ஒவ்வொரு மேலதிக வீராங்கனைக்கும் போட்டிக் கட்டணத்தின் 25 வீதம் வழங்கப்படும். தொடர்ந்து இரு தரப்பு அல்லது சர்வதேச தொடர்களில் அணி வெற்றி பெறும் ஒவ்வொரு போட்டிக்காகவும் ஒவ்வொரு வீராங்கனைக்கும் வெற்றிக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 250 டொலர்கள் வழங்கப்படும் என்று கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கட்டண அதிகரிப்பு ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்துவது மற்றும் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளை வலுவூட்டும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவரும் மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை மகளிர் அணி முதல் இரு போட்டிகளிலும் வெற்றியீட்டி அரையிறுதி வாய்ப்பை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கை மகளிர் அணி நாளை (16) நடப்புச் சம்பியன் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
