ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்குமென தாம் நம்புவதாக தெரிவித்துள்ள இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங், இலங்கை மக்களுக்களின் வளமான வாழ்வுக்கு இயலுமான அனைத்து ஒத்துழைப்புக்களையும் சீனா வழங்குமென உறுதியளித்தார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் சீன நிதியுதவியின் கீழ் 1996 வீடுகளை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன் மொரட்டுவை பெடரிவத்த பகுதியில் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் ஊடாக குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கென 575 வீடுகள் மற்றும் கொட்டாவ பகுதியில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள வீடமைப்பு திட்டத்தின் ஊடாக 108 வீடுகள் மூத்த கலைஞர்களுக்கும் வழங்கப்படவுள்ளன.
இதன் இரண்டாம் கட்டம் தெமட்டகொட மற்றும் மஹரகம பகுதியலும் மூன்றாவது கட்டம் பெலியகொட பகுதியிலும் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் இந்த வீடமைப்பு திட்டத்தின் முதற்கட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு மொரட்டுவை பெடரிவத்த பகுதியில் நேற்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான சீனத்தூதுவர் சீ ஜென் ஹொங் அகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது உரையாற்றுகையிலேயே சீனத்தூதுவர் கீ சென்ஹொங் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இந்த வேலைத்திட்டம் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் நீண்டகால ஆழமான நட்புறவை பரைசாற்றுவதற்கான சிறந்த உதாரணமாகும்.
இலங்கையின் அபிவிருத்திக்கும் புதிய அரசாங்கத்துக்கும் சீனாவின் நிலையான ஒத்துழைப்புக்கான எடுத்துக்காட்டாகவும் இதை கருதலாம்.
இருநாட்டு மக்களினதும் நன்மை கருதி இருநாட்டு அரசாங்கமும் இருதரப்பு ஒத்துழைப்புகளுடன் ஒரே பாதையில் முன்னோக்கி பயணிக்கின்றது என்பதற்கான மற்றுமொரு சான்றாக இந்த வேலைத்திட்டம் அமைந்துள்ளது.
இலங்கை மக்களுக்களின் வளமான வாழ்வுக்கு இயலுமான அனைத்து ஒத்துழைப்புக்களை வழங்கத் சீன அரசாங்கமும் சீன மக்களும் தயாராக உள்ளனர்.
புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை மக்கள் புதிய மாற்றத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதன் ஊடாக இலங்கை ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் என நான் நம்புகிறேன் என்றார்.