பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று (டிசம்பர் 17) இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-André Francheவை தனது அலுவலகத்தில் சந்தித்து, தற்போதைய அனர்த்த நிவாரண நடவடிக்கைகள், நிறுவன மறுசீரமைப்புகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான நிவாரண உதவிகளின் ஒருங்கிணைப்பு தொடர்பில் கலந்துரையாடினார்.
அனர்த்தத்தின் போது இலங்கை மக்கள் வெளிப்படுத்திய தேசிய ஒற்றுமையும் மற்றும் தாங்கும் ஆற்றலும் பாராட்டத்தக்கவை என ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர், தற்போதைய நிவாரண நடவடிக்கைகள், கடந்த கால குறைபாடுகளிலிருந்து தெளிவான மாற்றத்தை பிரதிபலிப்பதுடன், ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த அணுகுமுறைக்கான முக்கிய திருப்புமுனையாக அமைகின்றது என குறிப்பிட்டார்.
அனர்த்த முகாமைத்துவத்தை வலுப்படுத்தும் முக்கிய மறுசீரமைப்புகளான, அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை தேசிய பாதுகாப்பின் ஒரு அங்கமாக அங்கீகரித்தல் ஆகியவற்றை பாதுகாப்பு பிரதி அமைச்சர் விளக்கினார்.
மேலும், வெளிநாட்டு நிவாரண உதவிகளை கண்காணித்து ஒழுங்குபடுத்துவதிலும், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதிலும் வெளிநாட்டு மனிதாபிமான உதவி (விநியோகப் பொருட்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்ட குழு (HL-FRAC) வின் செயல்பாடுகள் குறித்தும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு விளக்கமளித்தார்.
விநியோக மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட களஞ்சிய வசதிகள் ஆகிய விடயங்கள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டு , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை (DMC) பொருற்களை பெறுநராக நியமிப்பதன் மூலம் நடைமுறைகளை எளிமைப்படுத்தல் மற்றும் மையப்படுத்தப்பட்ட விநியோக ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் போன்ற முன்மொழிவுகள் இதன் போது முன்வைக்கப்பட்டன.
இலங்கை ஜனாதிபதி மற்றும் மக்கள் சார்பில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஐக்கிய நாடுகள் அமைப்பு, சர்வதேச பங்குதாரர்கள் மற்றும் தொடர்புடைய அமைப்புகளின் தொடர்ச்சியான ஆதரவுக்கு மனமார்ந்த பாராட்டையும் தெரிவித்துக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர், ஐ.நா. அமைப்பின் தொடர்ச்சியான உதவிகளை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், சிறந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் கொண்ட ஒருங்கிணைந்த கட்டமைப் பொன்றை முன்மாதிரியாக எடுத்துக்காட்டினார்.
மேலும், மனிதாபிமான நிவாரண உதவிகளின் சுங்கச் செயல்முறையை விரைவுபடுத்த விமான நிலையம் மற்றும் துறைமுகத்தில் தற்காலிக ஒரே இட சேவை மையம் ஒன்றை அமைப்பதையும் முன்மொழிந்தார்.
இச்சந்திப்பு, இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஒத்துழைப்பும் தேவையான மறுசீரமைப்புகளும் மேற்கொள்ளப்படும் என உறுதிப்படுத்தலுடன் நிறைவடைந்தது.










