இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச, மீண்டும் அரசியலுக்கு வருவது தொடர்பில் எதனையும் அறிவிக்கவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வரும் முடிவை அவர் எடுப்பார் என தான் நம்பவில்லை எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.
கண்டியில் இன்று இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது:
“இந்த நாட்டின் சாதாரண குடிமக்களுக்கு இருக்கும் சுதந்திரம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இருக்க வேண்டும். அவர் தனது அமெரிக்க குடியுரிமையைத் துறந்து, இந்த நாட்டுக்காக பணியாற்றினார். எனவே, அவர் வெளிநாடுகளில் ஒளிந்த வாழ்வதை அனுமதிக்க முடியாது. இது அவரது மனித உரிமை மீறலாகும்.
எனவே, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அவர் இந்த நாட்டுக்கு திரும்புவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம்.
அதேபோன்று இடைக்கால அரசாங்கத்தையோ அல்லது இடைக்கால நிர்வாகத்தையோ விரைவில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தோம். ஏனெனில், இந்தப் பிரச்சினையை மேலும் இழுத்தடிக்க அனுமதிக்க முடியாது. நாடு டாலர் நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகின்றது.
இன்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பாராளுமன்றத்தில் 145 எம்பிக்கள் உள்ளனர்.” – எனவும் அமைச்சர் பிரசன்ன குறிப்பிட்டார்.