இலங்கை விமானப்படையை வலுப்படுத்த நடவடிக்கை!

இலங்கை விமானப்படை 2026 ஆம் ஆண்டில் விமானங்களில் பாரிய மேம்படுத்தல்கள் மற்றும் பழுதுபார்ப்புகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குறூப் கப்டன் நளின் வெவகும்புர தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் அமெரிக்கா பத்து TH-57 சீ ரேஞ்சர் (பெல் 206) உலங்குவானூர்திகளை அமெரிக்கா கொடையாக வழங்கவுள்ளது.

மேலதிகமாக, அமெரிக்கா இந்த ஆண்டிலும், அவுஸ்ரேலியா 2027 ஆம் ஆண்டிலும்,இலங்கை விமானப்படைக்கு இரண்டு C-130 போக்குவரத்து விமானங்களை வழங்கவுள்ளன.

இவற்றைப் பொறுப்பேற்பதற்கான செயல்முறைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

TH-57 சீ ரேஞ்சர் உலங்குவானூர்திகளின் முதல் தொகுதி வரும் பிப்ரவரி மாத நடுப்பகுதியில் விமானப்படைக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை இலங்கை விமானப்படை, பல Mi-17 உலங்குவானூர்திகளைப் பழுதுபார்க்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

இவை, இந்த மாத இறுதிக்குள் பழுதுபார்ப்புக்காக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, நான்கு Mi-17 உலங்குவானூர்திகளை அவசரமாக பழுதுபார்ப்பதற்கான, பல மில்லியன் டொலர் உடன்பாட்டிற்கு சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்தது,

இதற்கான செலவு ஒரு உலங்குவானூர்திக்கு கிட்டத்தட்ட, 4.5 மில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றின் பழுதுபார்ப்பு மற்றும் சேவை ஆயுட்கால நீடிப்பு திட்டத்திற்காக மொத்த செலவு 18 மில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவின் M/s வின்ஸ்லி டிபென்ஸ் குரூப் க்கு வழங்கப்பட்டது.

அதன் உள்ளூர் முகவரான M/s செகுராடெக் லங்கா நிறுவனம், மிகக் குறைந்த மதிப்பீடு செய்யப்பட்ட ஏலதாரராக அடையாளம் காணப்பட்ட பின்னர்., சிறிலங்கா விமானப்படை ஏல செயல்முறையைத் தொடங்கியது.

இருப்பினும் அதிகாரத்துவ தடைகள் காரணமாக முன்னேற்றம் தாமதமானது.

பழுதுபார்ப்புகள் முடிந்ததும், Mi-17 உலங்குவானூர்திகளில் ஒன்று சிறிலங்கா விமானப்படை பணியாளர்களை உள்ளடக்கிய, ஐ.நா அமைதிப்படை பணிகளுக்கு அனுப்பப்படும் என்று விமானப்படை பேச்சாளர் குறூப் கப்டன் வெவகும்புர தெரிவித்துள்ளார்.

அண்மைய இயற்கைப் பேரிடரின் போது, சிறிலங்கா விமானப்படையின் செயற்திறன் குறைபாடுகள் வெளிப்பட்டதை அடுத்து, சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக உதவியை நாடியிருந்தது.

இதையடுத்தே, இலங்கை விமானப்படையை வலுப்படுத்தும் திட்டங்களை துரிதப்படுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles