இளைஞர்களுக்கு உறுதுணையாக நிற்பேன்!

இளம் சமூகத்திற்கும் நான் சேவை செய்ய தயாராக இருக்கின்றேன். எந்த சந்தர்ப்பத்திலும் நான் இளம் சமூகத்தினரை கைவிட மாட்டேன். உங்களுக்கு உறுதுணையாக நிற்பேன். என்று நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

மலையக மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு நாம் 200 வேலைத்திட்டத்திற்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ள “இளைஞர்களின் எழுச்சி” எனும் தொனிப்பொருளில் இளைஞர் மாநாடு கண்டி இலங்கை தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (22.06.2024) நடைபெற்றது.

நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பங்கேற்புடன்-AIESEC தொண்டர் அமைப்பின் ஒத்துழைப்புடன் இந்த இளைஞர் மாநாடானது இடம்பெற்றிருந்தது.

இந்த மாநாட்டில் விசேட விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மேலும் தனது உரையில் தெரிவித்ததாவது.

நாம் எப்பொழுதுமே பெரிதாக எதிர்பார்ப்பது அரச வேலை வாய்ப்புகளை மாத்திரமே, ஆனால் அது தவறல்ல தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் சுயத்தொழில் முயற்சியான்மை போன்றவற்றில் ஈடுபடுவது எதிர்காலத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதனை நாம் உணர வேண்டும்.

குறிப்பாக இந்த காலக்கட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் பெருந்தோட்ட துறையினரை பொருத்தவரையில் 30 சதவீதமான மாணவர்களுக்கு மாத்திரமே தரமான கல்வி கிடைக்கின்றது.

அதேபோல் குறைந்த அளவிலான தொழில் வேலைவாய்ப்புகளே காணப்படும் இந்த சமயத்தில் நாம் அதனை எவ்வாறு பயன்படுத்தி வெற்றிக்கொள்ள வேண்டும் என்பதனை எதிர்கால இலக்காக கொண்டு பயணிக்க வேண்டும்.

ஆனால் அது ஒன்றும் தவறல்ல நம்மைப் பொறுத்தவரையில் அரச வேலைவாய்ப்பு தவித்து சமூக முயற்சி, சமுதாய முயற்சி மற்றும் சுயத்தொழில் முயற்சி ஆகியவற்றை இலக்காக கொண்டு பயணிப்போமானால் எமது எதிர்காலமானது சுபீட்சமாக அமையும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

முதலில் நம்மை நாம் மதித்து பழக வேண்டும் பின்னர் நாம் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கி கொண்டால் அனைத்து வகையான வெற்றிகளையும் பெறக்கூடியதாக காணப்படும்.

ஆகவே என்றும் எப்பொழுதும் நான் உங்களுடைய பிரதிநிதி, உங்களுக்காகவே நான் சேவை செய்ய தயாராக இருக்கின்றேன். எந்த சந்தர்ப்பத்திலும் நான் உங்களை கைவிட மாட்டேன் உங்களுக்கு உறுதுணையாக நிற்பேன் என்று தெரிவித்தார்.

இம் மாநாட்டில் அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன், அமைச்சின் செயலாளர் முகமது நபீல், இலங்கையின் தொழில்முறை மோட்டார் பந்தய பிரபல வீரர் டிலந்த மாலகமுவ, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பீடாதிபதி மாதவ ஹேரத், இலங்கை பிஸ்கட் நிறுவன(CBL) முதன்மை இயக்குனர் சமித்த பெரேரா அமைச்சின் உயர் அதிகாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.

ஆ.ரமேஸ்.

Related Articles

Latest Articles