” நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தி, நாடாளுமன்றத்துக்கு அதிகாரங்களை பகிரும் வகையிலான 21ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் வகையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தற்போது ஆடப்படுகின்ற அரசியல் சூதாட்டத்தின் காரணமாகவே 21ஆவது திருத்தச் சட்டமூலம் இழுபறி நிலையில் உள்ளது.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மறுசீரமைப்புக்கான தேசிய இயக்கத்தின் பிரதிநிதிகள் குழுவினருடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (15) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் கூறுகையில்,
” நீதியமைச்சரின் 21 ஆவது திருத்தம் அரசாங்கத்தின் 21 ஆவது திருத்தம் எதிர்க்கட்சியின் 21 ஆவது திருத்தம் என எதுவும் இல்லை. ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தனி நபர் பிரேரணையாக கொண்டு வரப்பட்ட 21 ஆவது திருத்தம் மாத்திரமே தற்போதுள்ள ஒரே ஒரு திருத்தமாகும்.
உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படவிருக்கிறது. நாடாளுமன்றத்தின் மூன்றாவது வாரத்தில் அது குறித்து விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படலாம்.
எவ்வாறாயினும், இந்நாட்டில் சீர்திருத்தங்களை விட அரசியல் விளையாட்டுக்களில் மூழ்கியிருப்பதால் இது பற்றி விவதாதிக்கப்படாத இரண்டாம் பட்ச கவனிப்பே இருக்கிறது.
தற்போதைய அரசியல் நெருக்கடிக்கான தீர்வு புதிய மக்கள் ஆணையிலையே தங்கியுள்ளது.
இந்நெருக்கடிக்கு சில மாதங்களில் தீர்வு இருப்பதாக சில வீரர்கள் பெருமை பேசினாலும் கூட, உண்மையான நிலைப்பாடு அவ்வாறு இல்லை.
புதிய சீர்திருத்தச் செயற்பாடுகளுக்கு சகல தரப்புகளினதும் யோசனைகள் இன்றியமையாதது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.










