இஸ்ரேலிய அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களால் பெரும் பதற்றம்!

இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, தனது பாதுகாப்பு அமைச்சரை பதவி விலக்கியதை அடுத்து இஸ்ரேல் எங்கும் பாரிய ஆர்ப்பட்டங்கள் வெடித்துள்ளன.

இஸ்ரேலின் சட்ட முறையை மாற்றி அமைக்கும் அரசின் சர்ச்சைக்குரிய திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் யோவ் களன்ஸ் எதிர்ப்பு வெளியிட்டதை அடுத்தே அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று (27) அதிகாலை நெதன்யாகுவின் வீட்டுக்கு அருகில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் மற்றும் படையினர் தண்ணீரை பீச்சியடித்தனர். இஸ்ரேலின் நிலை ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி இருப்பதாகவும் சமரசம் ஒன்றுக்கு வரும்படியும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

திட்டமிடப்பட்ட இந்த சட்டத்தை கொண்டுவருவதில் ஏற்கனவே ஒரு வார காலம் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தத்தின்படி நீதிபதிகளை நியமிக்கும் குழு அரசின் முழு கட்டுப்பாட்டில் வரவுள்ளது.

அதேபோன்று பதவி வகிக்க தகுதியற்றவர் என்று நீதிமன்றம் தீர்மானிக்கும் தலைவரை பதவி நீக்குவது இந்த சட்ட சீர்திருத்தத்தில் கடுமையாக்கப்பட்டுள்ளது. இது பதவியிலுள்ள நெதன்யாகு முகம்கொடுத்திருக்கும் வழக்கு விசாரணையில் இருந்து தப்புவதற்கு கொண்டுவரப்பட்டிருப்பதாக பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது.

இஸ்ரேலிய கொடிகளுடன் டெல் அவிவில் திரண்ட நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான நெடுஞ்சாலையை முடக்கியதோடு வீதியில் தீப்பந்தங்களையும் எரித்தனர். இதனை அடுத்து பொலிஸாருடன் மோதலும் ஏற்பட்டது.

இந்நிலையில் அரச பல்கலைக்கழகங்கள், தொழிலாளர் சங்கங்கள் மற்றும் வர்த்தகத் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். நெதன்யாகு நாட்டில் இருந்து வெளியே இருக்கும் சந்தர்ப்பத்தில் கடந்த சனிக்கிழமை தொலைக்காட்சியில் பேசியபோதே களன்ஸ் இந்த சட்ட சீர்திருத்தத்தை எதிர்த்தார். இதனை அடுத்து பாதுகாப்பு அமைச்சராக அவர் மீதான நம்பிக்கை இழந்துவிட்டதாக நெதன்யாகு அறிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles