இஸ்ரேலை தரைமட்டமாக்குவோம்: ஈரான் இராணுவ தளபதி சூளுரை!

“இஸ்ரேல் நகரங்களை சரியான நேரத்தில் தரைமட்டம் ஆக்குவோம்” – என்று ஈரான் இராணுவமான புரட்சிகர படையின் தளபதி இப்ராஹிம் ஜபாரி சூளுரைத்துள்ளார்.

அவரின் இந்த கருத்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

மேற்கு ஆசிய நாடான ஈரான் – இஸ்ரேல் இடையே நீண்ட கால பகை உள்ளது.

அமெரிக்க ஆதரவு பெற்ற இஸ்ரேலுக்கு எதிராக, ஈரான் அரசு, ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளை ஊக்குவித்து வந்தது.

தற்போது மேற்படி இரு குழுக்களும் இஸ்ரேலில் தீவிர தாக்குதலில் சின்னபின்னமாகி உள்ளன.

இதனால் இஸ்ரேலுடன் கடந்த ஆண்டு நேரடி மோதலில் இறங்கியது ஈரான். அந்நாட்டின் மீது ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை நூற்றுக்கணக்கில் ஏவி தாக்குதல் நடத்தியது.

அவை அனைத்தையும் இஸ்ரேலின், ‘அயர்ன் டோம்” எனப்படும் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பம் வானிலேயே அழித்தது.

இந்நிலையிலேயே ஈரான் இராணுவமான புரட்சிகர படையின் தளபதி இப்ராஹிம் ஜபாரி ‘ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3″ என்ற பெயரில் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடவடிக்கையில் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

‘ இந்த நடவடிக்கை சரியான நேரத்தில், துல்லியமாக இஸ்ரேலை அழிக்கும்.” எனவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு பதிலடி தந்துள்ள இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார், ”நம்மை அழிப்பதே தன் குறிக்கோள் என்று எதிரி கூறினால், -அதை நம்ப வேண்டும் என்பதை யூத மக்கள் வரலாற்றிலிருந்து கற்றுள்ளோம். நாங்கள் பதிலடி தர தயாராக உள்ளோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Related Articles

Latest Articles