‘இஸ்ரேல் – காசா போர்’ – ஐ.நா. பொதுச்சபை நாளை கூடுகிறது

இஸ்ரேல் மற்றும் காசா மோதல் தொடர்பிலும், அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாகம் ஆராய்வதற்கு ஐ.நா பொதுச் சபை நாளை (26) அவசரமாக கூடவுள்ளது.

போர் தொடர்பில் தீர்மானமொன்றை நிறைவேற்ற ஐ.நா பாதுகாப்புச் சபை தவறிய நிலையில், ரஷ்யா, சிரியா, பங்களாதேஷ், வியட்நாம் மற்றும் கம்போடியா உள்ளிட்ட நாடுகள் நாடுகள் பொதுச் சபையை கூட்டுமாறு அழைப்பு விடுத்தன.

இஸ்ரேல் – காசா போர் தொடர்பில் ஐ.நா பாதுகாப்புச் சபை தொடர்ந்து பிளவுபட்டு காணப்படுகிறது.

ஆரம்பத்தில் மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்து ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்த நிலையில் அதனைத் தொடர்ந்து பிரேசில் கொண்டுவந்த தீர்மானத்துக்கு 15 நாடுகளில் 12 நாடுகள் ஆதரவு அளித்தபோதிலும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா அதனை நிராகரித்தது.

ஐ.நா பொதுச் சபையின் அவசரக் கூட்டத்தில் அதன் 193 அங்கத்துவ நாடுகளும் பங்கேற்க முடியும். காசா மீது தரைவழி தாக்குதலை நடத்த தயாராகி வரும் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க அரபு நாடுகள் முயன்று வருகின்றன.

கடந்த ஆண்டு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து ஐ.நா பொதுச் சபை விசேட கூட்டம் நடைபெற்றது. எனினும் பலஸ்தீன விவகாரம் தொடர்பில் பொதுச் சபை அவசர கூட்டத்தை நடத்துவது கடந்த ஐந்து ஆண்டுகளில் இது முதல்முறையாகும்.

Related Articles

Latest Articles