வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து, அரியாலைப் பகுதியில் வன்முறைக் கும்பலால் இடைமறிக்கப்பட்டது. பேருந்தில் ஏறிய 5 பேர் கொண்ட கும்பல் பேருந்துச் சாரதியை சரமாரியாக வாளால் வெட்டியதுடன் பயணி ஒருவர் மீதும் மிக மோசமாக தாக்குதல் நடத்தி காயத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடியுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவிலிருந்து நேற்று இரவு 6.30 மணிக்கு யாழ்ப்பாணம் நோக்கி பேருந்து பயணத்தை ஆரம்பித்தது. இரவு 8.10 மணியளவில் பரந்தனில் இயந்திரக் கோளாறு காரணமாக பேருந்து திடீரென நிறுத்தப்பட்டது.
பயணி ஒருவர், பேருந்து ஏன் நிறுத்தப்பட்டது என சாரதியிடம் கேட்டார். பேருந்தில் பயணம் செய்த சக பயணி, இதன்போது கேள்வி எழுப்பிய பயணியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டார். இதற்கிடையில் பேருந்தின் இயந்திரக்கோளாறு சரி செய்யப்பட்டது. யாழ்ப்பாணத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.
இரவு 9.30 மணியளவில் அரியாலையை அண்மித்து பேருந்து பயணித்துக்கொண்டிருந்தது. இதன்போது திடீரென வீதியை மறித்து பேருந்தினுள் முகத்தை மூடியவாறு 5 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஏறியது. அவர்களில் இருவரின் கைகளில் வாளும், மூவரின் கைகளில் பொல்லுக் கட்டைகளும் இருந்தன.
இயந்திரக் கோளாறு காரணமாக பேருந்து நிறுத்தப்பட்டபோது சாரதியிடம் கேள்வி எழுப்பிய நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்றைய பயணியை பேருந்திலிருந்து வெளியே இழுத்தெடுத்த வன்முறைக் கும்பல் அவர் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியது. இதன்போது சாரதி மீதும் வன்முறைக் கும்பல் வாளால் வெட்டி தாக்குதலை நடத்திவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பியோடியது.
காயங்களுடனும் சாரதி பேருந்தை தொடர்ந்து செலுத்திச் சென்றபோதும் யாழ். மாவட்டச் செயலகத்துக்கு அப்பால் அவரால் தொடர்ந்து சாரத்தியம் செய்ய முடியவில்லை. இதனையடுத்து பயணிகள் அனைவரும் வேறொரு பேருந்தில் ஏற்றப்பட்டு யாழ்ப்பாண நகரில் இறக்கிவிடப்பட்டனர்.
சம்பவத்தில் காயமடைந்த பேருந்துச் சாரதியும் பயணியும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.










