ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அவற்றை முழுமையாக அழிக்கவில்லை என்று சர்வதேச அணுசக்தி அமைப்பின் தலைவர் க்ரோஸி தெரிவித்தார்.
கடந்த ஜூன் 13 அன்று, ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதாகக் கூறி, தெஹ்ரானின் அணு மற்றும் இராணுவ வசதிகளை இஸ்ரேல் தாக்கியது.
பின்னர் அமெரிக்காவும் இந்தத் தாக்குதல்களில் இணைந்தது.ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் மீது குண்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சேதத்தின் உண்மையான அளவு தெளிவாகத் தெரியவில்லை.
இந்நிலையிலேயே ஈரான் சில மாதங்களுக்குள் தனது சொந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்வதற்கான மையவிலக்குகளை உருவாக்க முடியும் என்று சர்வதேச அணுசக்தி அமைப்பின் தலைவர் குறிப்பிட்டார்.
ஈரான் இன்னும் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப திறன்களைக் கொண்டுள்ளது, எனவே அவர்கள் விரும்பினால், அதை மீண்டும் செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி கூறிவருகின்றார்.