‘ஈரானுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.” – என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறவித்துள்ளார்.
ஈரான் அணுஆயுதங்களை தயாரிக்க ஆரம்பம் முதலே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கடந்த 12 நாட்களாக ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுக்க மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் உண்டானது.
ஈரானின் போர்டோவ் உள்ளிட்ட 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது. இதனால் பதற்றம் மேலும் அதிகரித்தது. இதன் பின்னர், இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது.
அமெரிக்காவின் தாக்குதலில், ஈரானின் அணுசக்தி நிலையங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், நேட்டோ அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க நெதர்லாந்து வந்த அமெரிக்க ஜனாதிபதி, ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில்,
” ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அந்த இடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கத்தாரில் உள்ள அமெரிக்க படை தளத்தை ஈரான் தாக்குவதற்கு முன்னர் அங்கிருந்து வீரர்கள் அனைவரும் வெளியேறி விட்டனர்.” – என்று குறிப்பிட்டார்.
அத்துடன், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் நான் ஆர்வம் காட்டவில்லை. ஒப்பந்தம் ஏற்பட்டாலும் இல்லாவிட்டாலும் அதைப் பற்றி கவலையில்லை. அந்நாட்டின் அணுசக்திகட்டமைப்பை அழித்துவிட்டோம்.
அவர்களால் அதனை தயாரிக்க முடியாது.
அதேநேரத்தில் அடுத்த வாரம் ஈரானுடன் அடுத்தவாரம் பேச்சுவார்த்தை நடைபெறும். அப்போது ஒப்பந்தம் கையெழுத்து ஆகலாம். உக்ரைன் மீதான தாக்குதலில் இருந்து வெளியேற ரஷ்ய ஜனாதிபதி புடின் விரும்புகிறார். – என ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.