Upadte
ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளது. இதனை இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
……….
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. மேலும், மேற்காசியாவில் உள்ள தனது தூதரக அதிகாரிகள், ராணுவத்தினரை, நாடு திரும்பும்படி கூறியுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர், கடந்த 2023 அக்டோபரில் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடர்ந்த போர், தற்போதும் தொடர்கிறது.
இந்தப் போரின்போது, ஹமாஸ் அமைப்புக்கு, மற்றொரு மேற்காசிய நாடான ஈரான் ஆதரவு தெரிவித்தது. மேலும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா, ஹவுதி பயங்கரவாத அமைப்புகளும், இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தின. ஈரானும் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், இஸ்ரேலின் அணுசக்தி தொடர்பான ரகசியங்களை திருடியுள்ளதாக ஈரான் சமீபத்தில் கூறியது.
இதற்கிடையே, ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே, அணுசக்தி தொடர்பான பேச்சு நடந்து வந்தது. ஐந்து சுற்று பேச்சு நடந்த நிலையில், ‘உடன்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கை இல்லை’ என, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் கூறினார்.
அணுசக்தி ஒப்பந்தத்தில் நல்ல முடிவு ஏற்படாவிட்டால், ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தும் என்றும் டிரம்ப் எச்சரித்திருந்தார். இதுபோலவே, அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என, இஸ்ரேல் கூறியிருந்தது.
அதுபோலவே, மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்குவோம் என, ஈரானும் எச்சரித்திருந்தது.
தற்போது, அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் முடிவு ஏதும் ஏற்படாத நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் என, அமெரிக்கா எச்சரித்துள்ளது.
மேலும், மேற்காசிய பிராந்தியத்தில் ஆபத்து உள்ளதாகக் கூறி, ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தன் நாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் ராணுவத்தை திரும்பி வரும்படி அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.