ஈரான், இஸ்ரேல் போர் உக்கிரம்: சர்வதேசம் மௌனம்!

ஈரான் நாட்டின் அணு ஆயுதக் களங்களின் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. அணு ஆயுதத் தயாரிப்பின் முக்கிய அங்கமான ‘யுரேனியம் செறிவூட்டல்’ பணி மேற்கொள்ளப்படும் இடங்களில் முக்கியமான ‘நடான்ஸ்”, குறிவைத்துத் தாக்கப் பட்டுள்ளது. ஈரான் நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதி மற்றும் அணு விஞ்ஞானிகள், தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் கூறுகின்றன.

ஈரான் மேற்கொண்டு வரும் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிகள் இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாய் இஸ்ரேல் நம்புகிறது; ஈரான் நாட்டின் அணு ஆயுத வலிமை, இஸ்ரேல் நாட்டின் இருப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று நேதன்யாகு தலைமையிலான இஸ்ரேலிய அரசு கருதுகிறது. மிகவும் அவசியமான தற்காப்பு நடவடிக்கை என்று இத்தாக்குதலை இஸ்ரேல் நியாயப்படுத்துகிறது.

ஈரான் நாட்டின் அணு ஆயுத ‘வசதிகள்’ முழுவதுமாக அகற்றப்படும் வரை, மேலும் சில நாட்களுக்கு இத்தாக்குதல் நீடிக்கும் என்றும் இஸ்ரேலிய அரசு அறிவித்துள்ளது.

சர்வதேச சமூகம் என்ன சொல்லும்..? எப்படி எதிர்வினை ஆற்றும்..? எங்கிருந்து என்னென்ன தடைகள் வரும்..? என்றெல்லாம் இஸ்ரேல் யோசிப்பதே இல்லை. ‘எங்கள் திட்டங்கள், எங்கள் செயல்பாடுகள்.. இவற்றை நாங்களே தீர்மானிப்போம். ‘பிறரின்’ கருத்துகளை நாங்கள் கவனத்தில் கொள்வதில்லை’ என்பதே இஸ்ரேல் நாட்டின் நிரந்தர நிலைப்பாடு.

‘சர்வதேச அழுத்தம்’ முற்றிலும் செயலிழந்து போன, ஐக்கிய நாடுகள் சபை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த இயலாத ஓர் இடம் – இஸ்ரேல்.

வியப்பில் ஆழ்த்துகிற விந்தை – இஸ்ரேல் குறித்து சொன்னது அனைத்தும் அப்படியே ஈரானுக்கும் பொருந்தும். ‘உலகம்’ பற்றி கவலை கொள்ளாத ஒரு நாடு – ஈரான்! ‘தான் சொல்வதே சரி, தான் செய்வதே அறம்’ என்று ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதே ஈரான் நாட்டின் ‘அடையாளம்’!

அதாவது, இரண்டு அடங்காப் பிள்ளைகளின், மற்றுமொரு அத்துமீறிய ஆட்டமாகவே இஸ்ரேல் நடத்திய தாக்குதலைப் பெரும்பாலான நாடுகள் பார்க்கின்றன.

‘இந்தத் தாக்குதல் எங்கள் மீதான போர்ப் பிரகடனம்’ என்று அறிவித்துள்ளது ஈரான் அரசு.

‘ஈரான் மீது தாக்குதல் நடத்திய ‘ஜியான்’ ஆட்சி, மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்’ என்று ஈரான் நாட்டின் சுப்ரீம் தலைவர் அயதுல்லா கோமேனி அறிவித்துள்ளார். ஏற்கனவே, இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதலை ஈரான் தொடங்கி விட்டதாய் செய்திகள் கூறுகின்றன.

1988 ஈரான் – இராக் போருக்குப் பிறகு முதன்முறையாக தனது நாட்டுக்குள் அந்நிய தாக்குதலை ஈரான் சந்தித்து உள்ளது.

தனது நாட்டின் ராணுவத் தளபதி மற்றும் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதற்குப் பழி தீர்க்க வேண்டும் என்று ஈரான் மக்கள் ஆங்காங்கே சிவப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஈரான் அரசுக்கு மேலும் அழுத்தத்தைக் கூட்டி வருகின்றனர்.

ஆகவே, வெகு விரைவில், இரு தரப்பில் இருந்தும் தாக்குதல் மேலும் தீவிரமடையும். இதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கக் கூடும்…?

‘ஹார்மஸ் ஜலசந்தி’ (Strait of Harmuz) மூலம் நடைபெறும் வணிகப் போக்குவரத்து தடைபடலாம்; பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கலாம். மற்றபடி, மேற்காசிய மண்டலத்தின் பதற்றம் பொதுவாக ‘வெளியே’ அதிகம் பரவுவது இல்லை. அதிலும், ஈரான் – இஸ்ரேல் போரில் உலக நாடுகள் அதிக அக்கறை காட்டும் என்று எதிர்பார்ப்பதற்கு இல்லை.

அரபு நாடுகளுக்கு மத்தியில் கூட ஈரானுக்குப் பெரிய அளவில் ஆதரவு கிடைக்க வாய்ப்பு இல்லை. உலக நாடுகளின் பார்வையில் ஈரான், ஆரோக்கியமான நல்லுறவுக்கான நாடாக இல்லை. இன்றைய நிலையில் ஈரானுக்கு இதுவே மிகப் பெரும் பின்னடைவாக இருக்கும். பிற நாடுகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை ஈரான் அரசு இனியேனும் புரிந்து கொண்டு, இணக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டதாகவே தோன்றுகிறது.

இஸ்ரேல் நாட்டின் வரம்பு மீறிய தாக்குதலுக்கு, பிற நாடுகள் ‘கடுமையான கண்டனம்’ தெரிவிக்கும்; சமாதான முயற்சிகளுக்கு முன்னுரிமை தாருங்கள் என்று கோரிக்கை விடுக்கும். மிதமிஞ்சிப் போனால், அமைதி வேண்டி ஐநா சபையில் தீர்மானம் நிறைவேற்றும்! இதற்கு மேல் உலக நாடுகள் இதில் தலையிட வாய்ப்பு இல்லை.

நிறைவாக, ‘அணு ஆராய்ச்சி ஈடுபட எங்களுக்கு உரிமை இல்லையா..?’ என்கிற ஈரான் அதிபரின் கேள்வி, ஆழமானது; அர்த்தம் உள்ளது.

தம்மிடம் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க முன்வராத நாடுகள், ‘மற்றவர்கள்’ அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடும் போது, தடுப்பது எந்த வகையில் ஏற்புடையது..?

‘நாங்கள் வைத்துக் கொள்வோம்; நீங்கள் வைத்துக் கொள்ளக் கூடாது’ என்பது, சிலர் மட்டும் அதிக சமமானவர்கள் என்றுதானே பொருள் தருகிறது..?

அணு ஆயுதப் பரவல் தடை சட்டம், முறையாக முழுமையாக உண்மையாகப் பின்பற்றப்பட வேண்டும். உலக நலனுக்கு அதுதான் நல்லது. ஆனால் அதன் தொடக்கம், அணு ஆயுதக் குறைப்பு / அழிப்பு அன்றி வேறு எதுவாக இருக்க முடியும்..?

‘அணு ஆயுதம் அழிவுக்கே வழிவகுக்கும்’ என்கிற குரல் மிக வலுவாக இந்தியாவில் இருந்து, குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்துதான் ஓங்கி ஒலித்தது. அணு ஆயுதத்துக்கு எதிராக மூதறிஞர் ராஜாஜி மேற்கொண்ட முயற்சிகள், மெய் சிலிர்க்க வைப்பவை. 1962-ல் இங்கிலாந்து, அமெரிக்காவுக்குப் பயணம் செய்து அந்நாட்டுத் தலைவர்களிடம் அணு ஆயுத ஆபத்துகளை விளக்கிக் கூறினார். அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி, ராஜாஜியின் பேச்சில் தெறித்த உண்மையைப் பெரிதும் பாராட்டினார்.

நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் ராஜாஜி எழுதினார் – ‘மற்றவர் செய்யட்டும் என்று காத்திருக்காமல் அணு ஆயுத நாடுகள் தாமாக முன்வந்து தம்மிடம் உள்ள ஆயுதங்களை பெருங்கடலில் வீசி அழியுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும், இது நடந்து, சுமார் எழுபது ஆண்டுகளுக்குப் பிறகும், எந்த முன்னேற்றமும் இல்லை.

நேரடியாக, மறைமுகமாக ‘ஆயுத வலிமை’ மென்மேலும் சண்டைகள், சேதங்கள், உயிரிழப்புகளுக்கே வழிவகுக்கும்.

தலைவர்கள் யோசித்துப் பார்க்கட்டும் – உலகில் எந்தப் போராவது, மனிதம் தழைக்க உதவி இருக்கிறதா…?

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles