ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எவரும் எனக்கு அறிவிக்கவில்லை -மைத்திரி சத்தியம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த நிலையில் தான் சிங்கப்பூருக்கு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மறுத்துள்ளார்.

சு.க பொலன்னருவை மாவட்ட மாநாடு சு.க தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய அவர், மருத்துவ சிகிச்சைக்காகவே சிங்கப்பூர் சென்றேன். வைத்தியசாலையில் இருக்கையில் எனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் எலிசபத் ஆஸ்பத்திரிக்குள் தொலைபேசி பாவிக்க முடியாது.எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. நான் நியமித்த ஆணைக்குழு விசாரணையிலும் நான் இதனை தெரிவித்தேன். என்னை யாரும் அறிவூட்டவில்லை.

எந்த தகவலாவது கிடைத்திருந்தால் ஊரடங்கு அமுல்படுத்தி அதனை தடுத்திருப்பேன். குண்டு வெடித்த 2019 ஜனவரி மாதம் தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் சஹ்ரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது குறித்து வினவியிருந்தேன். புலனாய்வு அதிகாரிகள்,பொலிஸார் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள். என்மீதான குற்றச்சாட்டு தொடர்பில் கவலையடைகிறேன்.நான் உண்மையான பௌத்தன். எனக்கு குண்டுவெடிப்பு தொடர்பில் எவரும் அறிவிக்கவில்லை என்றார்.

Related Articles

Latest Articles