உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைக்காக நியமிக்கப்பட்ட ஏழு போ் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமிலிருந்து இருவர் விலகியுள்ளனா்.
இன்று (16) அந்த மனுமீதான விசாரணைகள் இடம்பெற்றிருந்த நிலையில் அவர்கள் தனிப்பட்ட காரணத்துக்காக மனு விசாரணையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனா்.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன மற்றும் காமினி அமரசேகர ஆகியோரே இவ்வாறு விலகியுள்ளனா்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெறாமல் தடுப்பதற்கு அப்போதைய பாதுகாப்பு செயலாளா் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஆகியோா் நடவடிக்கை எடுக்காமையினால் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து, ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் தமது குழந்தைகளை இழந்த தம்பதியினர், ஹோட்டல் வர்த்தகர் ஒருவர் உள்ளடங்களாக 12 பேரால் அடிப்படை உரிமை மீறல் மனு, தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்களை விசாரணை செய்வதற்காகவே இந்த நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, இந்த12 மனுக்களும் எதிர்வரும் வருடம் மார்ச் மாதம் 14, 15,16,18 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
