உக்ரைனில் குவியும் ஆயுதங்கள்! கடும் சீற்றத்தில் புடின்

உக்ரைனுக்கான அயுத விநியோகத்தை அதிகரித்திருப்பது பற்றி பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மக்ரோன் மற்றும் ஜேர்மனி சான்சிலர் ஒலாப் ஸ்கோல்ஸிடம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரித்துள்ளார். அது நிலைமையை மேலும் ஸ்திரமற்றதாக மாற்றும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனித் தலைவர்களுடன் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற முத்தரப்பு தொலைபேசி பேச்சுவார்த்தையிலேயே புட்டின் இதனைத் தெரிவித்ததாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

மேற்கத்திய பொருளாதாரத் தடைகளாலேயே உணவு விநியோகங்களில் தடங்கல் ஏற்பட்டிருப்பதாகவும் புட்டின் இதன்போது குற்றம்சாட்டியுள்ளார்.

80 நிமிடங்கள் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் உக்ரைனில் உடன் போர் நிறுத்தம் ஒன்றை அமுல்படுத்த வேண்டும் என்றும் உக்ரைனில் இருந்து ரஷ்ய துருப்புகள் வாபஸ்பெறப்பட வேண்டும் என்று மக்ரோன் மற்றும் ஸ்கோல்ஸ், புட்டினை வலியுறுத்தியுள்ளனர்.

ரஷ்ய படையெடுப்பு ஆரம்பித்தது தொடக்கம் ரஷ்யா மற்றும் உக்ரைன் தூதுக் குழுவினர் நேரடியாகவும் வீடியோ இணைப்பு வழியாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தபோதும், அண்மைக்காலத்தில் அது நிறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் இணைப்பில் இருப்பதற்கு இந்த மூன்று தலைவர்களும் இணங்கியதாக இது பற்றிய செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே உக்ரைனின் ரஷ்ய எல்லையோரம் உள்ள கிழக்கு வட்டாரத்தில் போர் உக்கிரம் அடைந்துள்ளது. உக்ரைன் அதிகமான ஆயுதங்களைக் குவிக்கத் தொடர்ந்து முயற்சியெடுத்து வருகிறது.

டொனட்ஸ்க் வட்டாரத்தில் இருக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த லாய்மன் நகரை ரஷ்யப்படை கைப்பற்றியுள்ளது.

தமது தினசரி உரையில், உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்க்கி கிழக்கில் நிலவரம் விபரிக்க முடியாத அளவுக்கு மோசமாக இருப்பதாகக் கூறினார்.

எனினும் உக்ரைனியப்படை தொடர்ந்து தாக்குப்பிடிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

லுஹான்ஸ் வட்டாரத்தில் ரஷ்யப்படை செவரோ-டொனட்ஸ்க் நகருக்குள் சென்றிருப்பதாக உக்ரைனிய அதிகாரிகள் கூறினர். அந்நகரின் 90 வீதமான கட்டடங்கள் சேதம் அடைந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles